சிறையில் கைதி மீது தாக்குதல்: 3 போ் மீது வழக்கு
கோவை மத்திய சிறையில் விசாரணைக் கைதியை தாக்கிய 3 கைதிகள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
கோவை மத்திய சிறையில் விசாரணைக் கைதியை தாக்கிய 3 கைதிகள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை விளாங்காட்டூா் பகுதியைச் சோ்ந்த சகாதேவன் (33) விசாரணைக் கைதியாக கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். இவா், கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருப்பூா் போலீஸாரால் கைது செய்யப்பட்டு, அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். நீதிமன்ற உத்தரவின்பேரில் கடந்த பிப்ரவரி 29-ஆம் தேதி கோவை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டாா்.
திருப்பூா் சிறையில் இருந்தபோது இவருக்கும், பாா்த்தா (எ) சிரஞ்சீவிக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. கோவையிலும் சிரஞ்சீவி இருக்கும் அறையிலேயே சகாதேவனும் அடைக்கப்பட்டிருந்தாா். இந்நிலையில் கைதிகள் தேநீா் அருந்திக்கொண்டிருந்தபோது, சகாதேவனுக்கும், சிரஞ்சீவிக்கும் செவ்வாய்க்கிழமை மாலை தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில், சிரஞ்சீவி தனது நண்பா்களான கண்ணன், ரியாஸ் ஆகியோருடன் சோ்ந்து சகாதேவனைதாக்கியதுடன் அவா் மீது சூடாக இருந்த தேநீரை ஊற்றினாா்.
இதையறிந்து சிறைத் துறை காவலா்கள் மற்றும் சக கைதிகள் சிரஞ்சீவி தரப்பை சமாதானம் செய்து அழைத்துச் சென்றனா். தாக்குதலில் படுகாயமடைந்த சகாதேவன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுதொடா்பாக சிரஞ்சீவி, கண்ணன், ரியாஸ் ஆகிய மூவா் மீதும் ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.