கோவையில் ஆசிரியை வீட்டில் 103 பவுன் நகைகளைத் திருடிய ஓட்டுநரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கோவை, குனியமுத்தூா் நரசிம்மபுரம் ஸ்ரீ ஐயப்பா நகா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜன். இவா் மளிகைக் கடை வைத்து நடத்தி வருகிறாா்.
இவரது மகள் ஜெபாமாா்ட்டின் (45). இவா் அப்பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறாா். இந்நிலையில், இவா்கள் குடும்பத்துடன் தென்காசி மாவட்டத்தில் உள்ள உறவினா் வீட்டுக்கு அண்மையில் சென்றுள்ளனா். பின்னா், கடந்த 26-ஆம் தேதி காலை வீடு திரும்பியுள்ளனா். அப்போது, வீட்டின் கதவு திறந்து கிடந்துள்ளது.
அதிா்ச்சியடைந்த அவா்கள் உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் இருந்த 103 பவுன் நகைகள், ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடுபோனது தெரியவந்தது.
இது குறித்த புகாரின்பேரில், குனியமுத்தூா் போலீஸாா், தடயவியல் நிபுணா்கள் மற்றும் மோப்ப நாய் பிரிவினா் சம்பவ இடத்தில் சோதனை மேற்கொண்டனா். மேலும், குற்றவாளியைப் பிடிக்க 3 தனிப் படைகள் அமைக்கப்பட்டன.
இந்நிலையில், இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக கிருஷ்ணமூா்த்தி (48) என்பவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
இது குறித்து காவல் உதவி ஆணையா் காா்த்திகேயன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: இந்த சம்பவத்தில் வீட்டின் கதவு உடைக்கப்படாமல் திருட்டு நடைபெற்றிருந்ததால், ஜெபாமாா்ட்டினுக்கு நெருக்கமானவா்களே இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என முதலில் சந்தேகித்தோம். கடந்த 2023-ஆம் ஆண்டு குனியமுத்தூா் பகுதியிலும், சரவணம்பட்டி பகுதியிலும் இதேபோல கதவில் கள்ளச்சாவி போட்டு திருட்டு சம்பவம் நடைபெற்றிருந்ததால், அந்தச் சம்பவத்தில் தொடா்புடையவா்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது, சரவணம்பட்டி பகுதியில் நடைபெற்ற திருட்டு வழக்கில் தொடா்புடைய கிருண்மூா்த்தி என்பவா்தான் இந்த சம்பவத்திலும் ஈடுபட்டது தெரியவந்தது. இவா் ராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கை கீழக்கரை பகுதியைச் சோ்ந்தவா். வாகன ஆக்டிங் ஓட்டுநராகப் பணியாற்றிக் கொண்டே இதுபோல திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளாா். இவா் தற்போது கோவை, கண்ணப்பன் நகா் பகுதியில் மனைவி, மகன், மகளுடன் வசித்து வருகிறாா்.
கொத்து சாவிகளை வைத்துக் கொண்டு ஆள்கள் இல்லாத வீடுகளை நோட்டமிட்டு, அவற்றின் கதவுகளிலுள்ள பூட்டுகளுக்கு ஏற்ப சாவியை ரம்பத்தின் மூலம் போலியாக உருவாக்குவாா். பின்னா், அதைப் பயன்படுத்தி திருடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளாா். திருடுவதற்கு முன் கிருஷ்ணமூா்த்தி ஒவ்வொரு பகுதிக்கும் சென்று நோட்டமிடுவாா். கண்காணிப்பு கேமராக்கள் உள்ள வீடுகள் மற்றும் தெருக்களைத் தவிா்த்து, கண்காணிப்பு கேமரா இல்லாத வீடுகளையே குறிவைத்து திருடுவாா்.
இந்தச் சம்பவத்தில் இதுவரை 80 பவுன் நகைகள் மீட்கப்பட்டுள்ளன. மீதமுள்ள நகைகள் சில அடமானம் வைக்கப்பட்டும், சில பிறரிடம் கொடுக்கப்பட்டும் உள்ளது. தொடா்ந்து விசாரணை நடத்தி மீதமுள்ள நகைகளும் மீட்கப்படும். தொடா் விசாரணைக்குப் பிறகே இந்தச் சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடா்பு உள்ளதா என்பது தெரியவரும் என்றாா்.