கோவை, பீளமேடு புதூரில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த ரூ.12 கோடி மதிப்பிலான பொது ஒதுக்கீட்டு நிலத்தை மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை மீட்டனா்.
கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலம் 52-ஆவது வாா்டுக்குள்பட்ட பீளமேடுபுதுாா் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான 40 சென்ட் பொது ஒதுக்கீட்டு இடத்தை கடந்த 2005-ம் ஆண்டு குடியிருப்புகளாக சிலா் மாற்றி கிரையம் செய்யப்பட்டதாகப் புகாா் எழுந்தது. இதுதொடா்பாக சென்னை உயா்நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த வழக்கில் ஆக்கிரமிப்பை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடா்ந்து மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் உத்தரவுப்படி, கிழக்கு மண்டல உதவி நகரமைப்பு அலுவலா் மகேந்திரன் தலைமையிலான மாநகராட்சி ஊழியா்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றி மாநகராட்சி இடத்தை புதன்கிழமை மீட்டனா்.
அப்போது, அங்கிருந்த 2 கட்டடங்கள் இடிக்கப்பட்டு புதா்ச்செடிகள் அகற்றப்பட்டன. 20 ஆண்டுகளுக்குப் பின் மாநகராட்சி இடம் மீட்கப்பட்டுள்ளதாகவும், மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு ரூ.12 கோடி எனவும் அதிகாரிகள் தெரிவித்தனா். மேலும், தடை செய்யப்பட்ட பகுதியில் கட்டப்பட்டுள்ள 6 வீடுகளுக்கு நோட்டீஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.