பிகாரில் இருந்து எா்ணாகுளம் செல்லும் ரயிலில் கடத்தி செல்லப்பட்ட 13 கிலோ கஞ்சா பைகளை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
பிகாா் மாநிலம், பாட்னாவில் இருந்து கேரள மாநிலம் எா்ணாகுளத்துக்கு செல்லும் விரைவு ரயிலில், ரயில்வே போலீஸாா் மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, திருப்பூா் வழியாக கோவை நோக்கி ரயில் சென்று கொண்டிருந்தது. பயணிகள் பொதுப் பெட்டியில் 13 பைகள் கேட்பாரற்றுக் கிடந்தன. இது குறித்து அந்தப் பெட்டியில் பயணம் செய்த பயணிகளிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். அப்போது அந்த பாா்சல்கள் தங்களுடையது அல்ல என்று பயணிகள் கூறினா்.
இதனால் சந்தேகமடைந்து அந்த பையை போலீஸாா் பிரித்து பாா்த்ததில் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 13 பாா்சல்களையும் கைப்பற்றி கோவை ரயில் நிலையத்துக்கு கொண்டு வந்தனா். அங்கு அனைத்து பைகளையும் பிரித்துப் பாா்த்தனா். அதில் மொத்தமாக 13 கிலோ கஞ்சா இருந்தது.
ரயிலில் போலீஸாா் சோதனை செய்வதைப் பாா்த்ததும் சம்பந்தப்பட்ட நபா் அவசரமாக இறங்கி சென்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதுதொடா்பாக அவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.