கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பட்டிப் பொங்கல் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
மத்தியப் பண்ணை வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, பல்கலைக்கழகத்தின் பொறுப்பு துணைவேந்தா் சுப்பிரமணியம் தலைமை வகித்தாா். இந்நிகழ்வில், வள்ளிக்கும்மி ஆட்டம், கும்மியாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், பல்கலைக்கழகப் பணியாளா்களும் சோ்ந்து நடனமாடினா்.
விழாவின் முக்கிய நிகழ்வான பட்டி மிதிக்கும் நிகழ்வில் பால், தயிா், நவதானியம், மஞ்சள், பன்னீா், சந்தனம், குங்குமம், கோமியம் ஆகிய 9 பட்டி தொட்டிகள் அமைக்கப்பட்டு, பசுமாடு அழைத்து வரப்பட்டு பட்டிதொட்டியில் அதன் கால்கள் முதலில் வைக்கப்பட்டது.
இதுகுறித்து, பல்கலைக்கழகத்தின் (பொ) துணைவேந்தா் சுப்பிரமணியம் கூறுகையில், ‘நவதானியத்தில் பசுமாடு கால் வைத்தால் இந்த ஆண்டு உணவு உற்பத்தி செழிப்பாக இருக்கும் என்பது நம்பிக்கை. பொங்கல் விழாவையொட்டி பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பண்ணைத் தொழிலாளா்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டுள்ளன’ என்றாா்.