முகப்பு
ஈரோடு

மயான நிலத்தை விற்கும் முயற்சியை கண்டித்து சாலை மறியல்

ஈரோடு, ரங்கம்பாளையம் பகுதியில் மயானத்துக்குப் பயன்படுத்தி வரும் இடத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்ததைக் கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் புதன்கிழமை ஈடுபட்டனர்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:22 PM
பகிர்:

ஈரோடு, ரங்கம்பாளையம் பகுதியில் மயானத்துக்குப் பயன்படுத்தி வரும் இடத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்ததைக் கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் புதன்கிழமை ஈடுபட்டனர்.
ஈரோடு, ரங்கம்பாளையம், ரணியன் வீதி, அண்ணா நகர் பகுதியில் 1,500 பேர் வசித்து வருகின்றனர்.  இப்பகுதிக்கென உள்ள மயானத்தை சின்னச்சடையம்பாளையம், சத்யா நகர் பகுதி மக்களும்  பயன்படுத்தி வருகின்றனர். 
இந்நிலையில், இந்த மயானத்தைச் சுற்றியுள்ள நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் சிலர் விற்பனை செய்துள்ளதாகத் தகவல் வெளியானதைத் தொடர்ந்து  அப்பகுதி மக்கள் வருவாய்த் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
இந்நிலையில், மயானப் பயன்பாட்டில் உள்ள நிலத்தையும் சிலர் போலி ஆவணம் தயாரித்து விற்க  முயற்சி செய்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் ரங்கம்பாளையம் பகுதியில் உள்ள பிரதான சாலையில் திரண்டு  திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த சூரம்பட்டி காவல் ஆய்வாளர்  ராஜ்குமார் சம்பவ இடத்துக்குச் சென்று பேச்சு நடத்தியபோது, வட்டாட்சியர் நேரில் வந்து விளக்கமளிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.
இதையடுத்து, வட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்படும் என போலீஸார் உறுதி அளித்ததையடுத்து அனைவரும் போராட்டத்தைக் கைவிட்டு பேச்சு நடத்துவதற்காக  வட்டாட்சியர் அலுவலகத்துக்குச் சென்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →