முகப்பு
ஈரோடு

அரசின் இலவச வேட்டி, சேலை தயாரிப்புக்கு கூலியை அதிகரிக்கக் கோரிக்கை

தமிழக அரசின் இலவச வேட்டி, சேலைக்கான உற்பத்திக்கான கூலி கடந்த 5 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் உள்ளதால் கூலியை உயர்த்தித் தர வேண்டும் என விசைத்தறியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On : 15 மே, 2018 at 1:10 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

தமிழக அரசின் இலவச வேட்டி, சேலைக்கான உற்பத்திக்கான கூலி கடந்த 5 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் உள்ளதால் கூலியை உயர்த்தித் தர வேண்டும் என விசைத்தறியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள கைத்தறி நெசவாளர்கள் தொடர்ந்து வேலைவாய்ப்பு பெறும் வகையில், பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம் 1983-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது. திட்டத்தின் மூலம் ஏழை, எளிய, முதியோர், ஆதரவற்றோர், விதவை ஆகியோருக்கு ரேஷன் கடைகள் மூலம் இவை வழங்கப்படுகிறது.
இதற்கான பணிகள் ஈரோடு, திருச்செங்கோடு, திருப்பூர், கோவை, விருதுநகர், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் நடக்கிறது. தமிழக அளவில் ஈரோடு மாவட்டம் விசைத்தறி நிறைந்த மாவட்டமாக உள்ளதால் இலவச வேட்டி, சேலை பணிக்கான மொத்த ஆர்டரில் 40 சதவீதம், ஈரோடு மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் 48 விசைத்தறி கூட்டுறவு சங்கங்கள் மூலம் இலவச வேட்டி, சேலை தயாரிக்கப்படுகிறது. இப்பணியின் மூலம் ஈரோடு மாவட்டத்தில் லட்சக்கணக்கான விசைத்தறி நெசவாளர்கள் பயன்பெறுகின்றனர்.
2018-ஆம் ஆண்டுக்கு ரூ. 486 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் ஒரு கோடியே 22 லட்சம் சேலை, ஒரு கோடியே 40 லட்சம் வேட்டி உற்பத்தி செய்யப்படுகிறது. இலவச வேட்டி, சேலை உற்பத்திக்கான கூலி கடந்த 5 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் உள்ளதால் விசைத்தறியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, ஈரோடு விசைத்தறியாளர்கள் கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் மூலம் இலவச வேட்டி, சேலை தயாரிக்கும் பணியில் நெசவாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இலவச வேட்டி, சேலை தயாரிக்க கூட்டுறவு சங்கங்கள் மூலம் கூலி வழங்கப்படுகிறது. 2011-ஆம் ஆண்டில் ஒரு வேட்டி நெசவு செய்ய ரூ. 16, 2012-இல் ரூ. 18.48, 2013-இல் ரூ. 21.60 என உயர்த்தப்பட்டது. இதேபோல், ஒரு சேலை நெசவு செய்ய 2011-இல் ரூ. 28.16, 2012-இல் ரூ. 31.60, 2013-இல் ரூ. 39.27 என உயர்த்தப்பட்டது. அதற்குப் பிறகு கூலி உயர்த்தப்படவில்லை.
ஒரு வேட்டி நெசவு செய்ய நெசவாளர்களுக்கு கூலி ரூ. 9, மின் கட்டணம், உதிரிபாகங்கள், போக்குவரத்து என இதர செலவு ரூ. 12.50 என செலவாகிறது. இதேபோல, சேலை உற்பத்திக்கான செலவு உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் உற்பத்திக்கான செலவு பல மடங்கு உயர்ந்துவிட்டதால் நெசவாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இலவச வேட்டி, சேலை உற்பத்திக்கு ஒதுக்கீடு செய்யப்படும் தொகையின் அளவு ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்து வருகிறது. ஆகையால், இலவச வேட்டி, சேலை உற்பத்திக்கு கூலியை உயர்த்தி வழங்க வேண்டும் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.