ஈரோடு குடிநீரேற்று நிலையங்களில் எம்.எல்.ஏ.க்கள் ஆய்வு
காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட ஈரோடு நகருக்கு குடிநீர் விநியோகம் நடைபெறும் நீரேற்று நிலையங்களின் மறு
காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட ஈரோடு நகருக்கு குடிநீர் விநியோகம் நடைபெறும் நீரேற்று நிலையங்களின் மறு சீரமைப்புப் பணிகளை ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை உறுப்பினர் கே.எஸ்.தென்னரசு, மேற்கு சட்டப் பேரவை உறுப்பினர் கே.வி.இராமலிங்கம் ஆகியோர் திங்கள்கிழமை நேரில் பார்வையிட்டனர்.
ஈரோடு அருகே காவிரிக் கரையோரம் செயல்பட்டு வரும் வைரம்பாளையம் நீரேற்று நிலையத்தில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையம், காவிரி ஆற்றின் நடுவில் உள்ள நீரேற்று நிலையம் ஆகியவற்றை பார்வையிட்டனர்.
கடந்த 10 நாள்களுக்கு முன் காவிரியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் காவிரி ஆற்றின் நடுப்பகுதியில் உள்ள நீரேற்று நிலையத்தில் மண்ணரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதன் மூலம், கரையோரப் பகுதியில் உள்ள நீரேற்று நிலையத்திலிருந்து தண்ணீர் கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. எனினும், ஆற்றில் அதிக அளவில் நீர் சென்றதால் அங்கிருந்து வரும் தண்ணீரை கரையோரம் உள்ள நீரேற்று நிலையம் மூலம் சுத்திகரிக்கப்பட்டு
விநியோகிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக காவிரியில் நீர்வரத்து குறைந்ததால் கரையோர நீரேற்று நிலையத்திலிருந்து தண்ணீர் எடுக்க முடியவில்லை.
இதனால், காவிரி ஆற்றின் நடுப்பகுதியில் உள்ள நீரேற்று நிலையத்திலிருந்து மீண்டும் நீரை எடுக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதற்காக, வைரம்பாளையத்தில் உள்ள நீரேற்று நிலையத்தை சட்டப் பேரவை உறுப்பினர்கள் கே.எஸ்.தென்னரசு, கே.வி.இராமலிங்கம், உதவி ஆணையர்கள், பொறியாளர்கள் திங்கள்கிழமை நேரில் பார்வையிட்டனர்.