பவானியில் விநாயகர் சிலையில் ரசாயனக் கலப்பு புகார்: இந்து முன்னணியினர், சிலை விற்பனையாளர்கள் மீது வழக்கு
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பவானி பகுதியில் விற்பனை செய்யப்படும் சிலைகளில் ரசாயனக் கலப்பு உள்ளதாக எழுந்த புகாரால் ஏற்பட்ட
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பவானி பகுதியில் விற்பனை செய்யப்படும் சிலைகளில் ரசாயனக் கலப்பு உள்ளதாக எழுந்த புகாரால் ஏற்பட்ட மோதல் சூழலைத் தொடர்ந்து, இந்து முன்னணியினர், சிலை விற்பனையாளர்கள் என 20 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பவானியை அடுத்த காலிங்கராயன்பாளையம் பகுதியில் 7 இடங்களில் விநாயகர் சிலை தயாரிப்பு மற்றும் விற்பனை நடைபெற்று வருகிறது. இச்சிலைகளில் தண்ணீரில் கரையாத ரசாயனத்தைப் பயன்படுத்தி உள்ளதாகவும், அரசு அறிவித்த உயரத்தைக் காட்டிலும் அதிகமாக உள்ளதாகவும், இந்து முன்னணி சார்பில் மாவட்ட நிர்வாகத்துக்குப் புகார் தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து, மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், போலீஸ் பாதுகாப்புடன் சனிக்கிழமை சிலை விற்பனை நிலையங்களில் சோதனை நடத்தி, 65க்கும் மேற்பட்ட சிலைகளைப் பறிமுதல் செய்து, அங்கு விற்பனை செய்யத் தடை விதித்தனர்.
அப்போது, அனைத்து சிலை விற்பனை நிலையங்களுக்கும் "சீல்' வைக்க வேண்டும் என இந்து முன்னணியினர் கோரினர். இதற்கு சிலை விற்பனையாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்படும் சூழல் நிலவியது. சம்பவ இடத்துக்கு விரைந்த பவானி காவல் துணைக் கண்காணிப்பாளர் டி.சார்லஸ் தலைமையிலான போலீஸார் இரு தரப்பினரையும் கண்டித்து, கலைந்து போகச் செய்தனர். அனுமதியின்றித் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக சிலை விற்பனையாளர்கள் தரப்பில் கொமதேக ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர் துரைராஜா, நகரச் செயலாளர் குமார் உள்ளிட்ட 11 மீதும், இந்து முன்னணியைச் சேர்ந்த ஈரோடு மேற்கு மாவட்டச் செயலாளர் கே.சி.முருகேஷ், நிர்வாகிகள் சசிகுமார், பார்த்திபன் உள்பட 9 பேர் மீதும் சித்தோடு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.