முகப்பு
ஈரோடு

மாதம் ஒருமுறை நூல் விலையை நிர்ணயிக்கக் கோரிக்கை

நூல் விலையை மாதம் ஒருமுறை நிர்ணயிக்க வேண்டும் என ஈரோடு விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

Updated On : 4 செப்டம்பர், 2018 at 1:09 AM
பகிர்:

நூல் விலையை மாதம் ஒருமுறை நிர்ணயிக்க வேண்டும் என ஈரோடு விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, அச்சங்க நிர்வாகிகள் கே.எம்.சுரேஷ், கே.கே.ராஜகணேசன், வி.நந்தகுமார் ஆகியோர் முன்னிலையில் நூற்றுக்கணக்கானோர் திரண்டு வந்து மாவட்ட ஆட்சியர் சி. கதிரவனிடம் திங்கள்கிழமை அளித்துள்ள மனு:
ஈரோடு மாவட்டத்தில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக  மக்களுக்கு வாழ்வாதாரமாகத் திகழ்வது விசைத்தறி தொழில்தான். ஈரோட்டில் வீரப்பன்சத்திரம், சித்தோடு, லக்காபுரம் உள்ளிட்ட  பகுதிகளில் சுமார் 30 ஆயிரம் விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இதில், பெரும்பாலான விசைத்தறியாளர்கள் தங்களின் விசைத்தறிகளில் செயற்கை நூல் எனப்படும் ரயான் நூல்களை, சில நூல் தயாரிப்பாளர்களிடமிருந்து கொள்முதல் செய்து  ரயான் துணிகளை உற்பத்தி செய்து வருகின்றனர்.
ரயான் நூலுக்கு உண்டான மூலப் பொருளுக்கு மாதம் ஒருமுறைதான் விலை ஏற்றம், இறக்கம் நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால், கடந்த 15 நாள்களில் ரயான் நூல் விலை ரூ. 200 இல் இருந்து பங்குச் சந்தையைப் போல படிப்படியாக உயர்ந்து தற்போது ரூ. 224 ஆக உயர்ந்துவிட்டது. இதன் காரணமாக நூல் கொள்முதல் செய்து துணியாக உற்பத்தி செய்ய குறைந்தபட்சம் 15 நாள்கள் ஆகும் நிலையில் நூலின் விலை உயர்வுக்கு ஏற்ப துணியின் விலையை உயர்த்த முடியாத விற்பனைச் சந்தை நிலவரம் உள்ளது.
எனவே, விசைத்தறித் தொழிலுக்கு மூலமாக உள்ள செயற்கை நூல்களின் விலை தினமும் ஏற்ற, இறக்கம் இல்லாமல் மாதம் ஒருமுறை நூல் விலையை நிர்ணயிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுறுவு நூற்பாலைகளில் ரயான் நூல்களை உற்பத்தி செய்து  குறைந்த விலையில் நெசவாளர்களுக்கு அளிக்க வேண்டும். விசைத்தறிக்கான தனி ரக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளனர்.
மணல் திருட்டை  தடுக்கக் கோரிக்கை:
பவானி வட்டம், ஜம்பை பகுதியைச் சேர்ந்த பவானி ஆறு பாதுகாப்புக் குழு அமைப்பாளர் ச.கு.செல்வகுமார் தலைமையில் திரண்டு வந்த பொதுமக்கள் ஆட்சியரிடம் அளித்த மனு:
சுமார் 8 ஆயிரம் மக்கள் வசித்து வரும் ஜம்பையில் பவானி ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றின் வடக்குப் பகுதியில் உள்ள பல்வேறு ஊர்களைச் சேர்ந்த மக்கள் இந்த ஆற்றைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், பவானி ஆற்றில் பவானியிலிருந்து சத்தியமங்கலம் வரை இரவு, பகல் பாராமல் சட்ட விரோதமாக மணல் அள்ளி வருகின்றனர். தற்போது பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மணல் அள்ளப்பட்ட பள்ளங்களில் மணல் நிரம்பி வழிகிறது. இது மணல் திருடுபவர்களுக்குச் சாதமாக உள்ளது. மேலும், கொப்பரை, சாக்கு பைகள் போன்ற உபகரணங்கள் மூலம் மணலைத் திருடி இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் ரூ. 100 முதல் ரூ. 120 வரை விற்று வருகின்றனர். இவ்வாறு மணல் திருடுவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பல ஊர்களில் ஆற்று மணலை ஊரார்களே ஏலம் விட்டு வருமானம் பார்க்கும் நிலை உள்ளது. 
இதைத் தடுக்க ஜம்பையில் உள்ள பல்வேறு அமைப்புகள் சார்பில் அதிகாரிகளுக்கு மனு அளித்தும், போராட்டங்கள் நடத்தியும் எவ்விதப் பயனுமில்லை.   எனவே, மாவட்ட ஆட்சியர் இப்பிரச்னையில் தலையிட்டு சட்டவிரோத மணல் கடத்தலைத் தடுத்து, மணல் அள்ளுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த 2 ஆண்டுகளாக மகனைக் காணாமல் தேடி வரும் தந்தை:
இதுகுறித்து, ஈரோடு நாடார்மேடு, லெனின் வீதியைச் சேர்ந்த ப.முருகேஷ் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்துள்ள மனு:
எனது ஒரே மகன் ஆனந்த் (19). ஈரோடு நஞ்சை ஊத்துக்குளி கருந்தேவன்பாளையத்தில்  உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். 21.4.2016 அன்று காலையில் வழக்கம்போல கல்லூரிக்குச் சென்ற ஆனந்த் வீடு திரும்பவில்லை. நண்பர்களிடம் விசாரித்தபோது எந்த தகவல்களும் கிடைக்கவில்லை. இதையடுத்து, ஈரோடு தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பிறகு ஒரு வாரம் கழித்து எனது மகன் ஆனந்த் இருக்கும் இடத்தை நெருங்கிவிட்டோம் என போலீஸார் கூறினர். எவ்வித முன்னேற்றமும் இல்லாததால் 3.7.2016 இல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அளித்த மனுவுக்கும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.
இந்நிலையில், எனது மகன் ஒரு பெண்ணிடம் நெருங்கிப் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அது தொடர்பாக போலீஸார் எந்த விசாரணையும் மேற்கொள்ளவில்லை. எனவே, எனது புகாரை சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு மாற்றம் செய்ய வேண்டும். இரண்டு ஆண்டுகளாக மகனைக் காணாமல்  நானும், எனது குடும்பத்தினரும் மன வேதனையில் சிக்கித் தவித்து வருகிறோம். எனது மகனை மீட்டுத் தர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
ரேஷன் பொருள்களை முறையாக வழங்கக் கோரிக்கை:
இதுகுறித்து, கவுந்தப்பாடி அருகே பி.மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட மூதாட்டிகள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு:
பி.மேட்டுப்பாளையம் பகுதியில் 75 குடும்பங்கள் வசிக்கிறோம். அங்கு வசிப்பவர்களில் பெரும்பாலானோர் 55 வயதுக்கும் மேற்பட்டவர்கள். கூலி வேலை செய்து வருகிறோம்.
பழைய ரேஷன் அட்டை, ஸ்மார்ட் அட்டையாக மாற்றியபோது விண்ணப்பித்து அங்குள்ள ரேஷன் கடையில் பதிவேற்றம் செய்தோம். எங்களில் சிலருக்கு மட்டுமே ஸ்மார்ட் கார்டு  கிடைத்துள்ளது. மற்றவர்களுக்குக் கிடைக்கவில்லை.
 கடந்த இரண்டு மாதங்களாக எங்களது பழைய குடும்ப அட்டை , புதிய ஸ்மார்ட் அட்டைகளுக்கு ரேஷன் பொருள்கள் வழங்குவதில்லை. இதுகுறித்து, ரேஷன் கடையில் கேட்டபோது, எங்களது அட்டைகள் பதிவில் இருந்து நீக்கப்பட்டுவிட்டதாகவும், பொருள்கள் ஒதுக்கீடு வழங்கவில்லை எனவும் கூறுகின்றனர். 
உணவுக்கு வேறு வழியில்லாத எங்களுக்கு  ரேஷன் அட்டை மூலம்  தொடர்ந்து அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருள்கள் வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
குறைகேட்பு முகாமில் 246 மனுக்கள்:
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தலைமையில் நடைபெற்ற முகாமில், முதியோர் உதவித் தொகை, விதவை உதவித் தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித் தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து மொத்தம் 246 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன.  அவற்றை ஆய்வு செய்த ஆட்சியர் தொடர்புடைய துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்துள்ள 4 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 4.75 லட்சம் மதிப்புள்ள செயற்கை உடல் உறுப்புக் கருவிகளை  ஆட்சியர் வழங்கினார்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலர் ச.கவிதா, தனித் துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ஆர்.பிரபாவதி உள்ளிட்டோர்  கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.