பவானி, காவிரி ஆற்றங்கரையில் வசிக்கும் மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள்
பவானி, காவிரி ஆற்றங்கரையில் ஆக்கிரமிப்பு செய்து வசித்து வரும் வீடற்ற ஏழை, எளிய மக்களுக்கு ரூ.25.84 கோடி மதிப்பில் 272 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி பூமி பூஜையுடன் தொடங்கி வைக்கப்பட்டது.
பவானி, காவிரி ஆற்றங்கரையில் ஆக்கிரமிப்பு செய்து வசித்து வரும் வீடற்ற ஏழை, எளிய மக்களுக்கு ரூ.25.84 கோடி மதிப்பில் 272 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி வெள்ளிக்கிழமை பூமி பூஜையுடன் தொடங்கி வைக்கப்பட்டது.
பவானி அருகேயுள்ள மைலம்பாடி ஊராட்சி, செம்பன்கரடு பகுதியில் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம், திருப்பூர் கோட்டம் சார்பில் இப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இங்கு, மொத்தம் 272 குடியிருப்புகள் தலா 400 சதுர அடிப் பரப்பளவில் கட்டப்படுகிறது. இத்திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ.25.84 கோடி. மத்திய அரசின் நிதியாக ரூ.4.08 கோடியும், மாநில அரசு நிதியாக ரூ.19.04 கோடியும் வழங்குகின்றன.
வீடுகள் பெறும் பயனாளிகள் பங்களிப்புத் தொகையாக ரூ.2.72 கோடி வசூலிக்கப்பட உள்ளது. ஒரு வீட்டின் மதிப்பு ரூ.9.50 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்படும் தகுதியான பயனாளிகள் ரூ.1 லட்சம் பங்களிப்புத் தொகையாக செலுத்த வேண்டும். இக்குடியிருப்பில் ஒவ்வொரு வீட்டிலும் பல்நோக்கு அறை, படுக்கை அறை, சமையலறை, கழிவறை மற்றும் குளியலறை கொண்டதாக அமையவுள்ளது.
இங்கு, தண்ணீர் வசதி, மின்சார வசதி, சாலை மற்றும் தெருவிளக்கு வசதி, குப்பைத் தொட்டிகள் மற்றும் பூங்காக்கள் உள்பட அனைத்து வசதிகளும் செய்யப்படும். இக்குடியிருப்பில் பவானி, காவிரி ஆற்றங்கரையை ஆக்கிரமித்து குடியிருந்து வரும் குடிசைவாசிகள் மற்றும் வீடற்ற நகர்புற ஏழைகள் தேர்வு செய்யப்பட்டு, பங்களிப்புத் தொகையுடன் அரசு விதிமுறைகளின்படி வீடுகள் ஒதுக்கப்பட உள்ளது. இங்கு, 5 பிளாக்குகளாக, தலா 64 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுகிறது.
கட்டுமான பணிகளை தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் பூமி பூஜை செய்து தொடக்கி வைத்தார். தொடர்ந்து, அமைச்சர் கருப்பணன் கூறுகையில், ஈரோடு மாவட்டத்தில் வீடற்ற ஏழை, எளிய மக்களுக்கு தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் சார்பில் சுமார் 10 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வழங்கப்படுகிறது. மயிலம்பாடி ஊராட்சியில் கன்னங்கரடு பகுதியில் 492 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது என்றார்.
தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரிய உதவி நிர்வாக பொறியாளர் எஸ்.சரவணகுமார், இளநிலைப் பொறியாளர் டி.சிலம்பரசன், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய குழு உறுப்பினர் கே.தட்சிணாமூர்த்தி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கே.கே.விஸ்வநாதன், பவானி ஒன்றியக்குழு உறுப்பினர் ப.குப்புசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி அடுத்த 15 மாத காலத்தில் முடிவடையும்.