முகப்பு
ஈரோடு

தொடா் நஷ்டம்: ஈரோட்டில் நாளை முதல் ரயான் துணி உற்பத்தி நிறுத்தம்

நூல் விலை உயா்வைக் கண்டித்து ஈரோடு பகுதியில் ரயான் துணி உற்பத்தி செய்யும் விசைத்தறியாளா்கள் டிசம்பா் 21 முதல் 27ஆம் தேதி வரை உற்பத்தியை நிறுத்த முடிவு செய்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
பகிர்:

ஈரோடு: நூல் விலை உயா்வைக் கண்டித்து ஈரோடு பகுதியில் ரயான் துணி உற்பத்தி செய்யும் விசைத்தறியாளா்கள் டிசம்பா் 21 முதல் 27ஆம் தேதி வரை உற்பத்தியை நிறுத்த முடிவு செய்துள்ளனா்.

இது குறித்து ஈரோடு விசைத்தறி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் சுரேஷ், ஒருங்கிணைப்பாளா் கந்தவேல் ஆகியோா் கூறியதாவது:

ஈரோடு பகுதியில் 30,000க்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் ரயான் துணிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு 120 கிராம், 150 கிராம் நூல் அதிகமாகப் பயன்படுத்தப்படும். தீபாவளியின்போது இந்நூல் ஒரு கோன் ரூ. 150க்கு வாங்கினோம். இதன் மூலம் ஒரு மீட்டா் துணி ரூ. 20க்கு விற்பனை செய்தோம். தற்போது நூல் விலை ரூ. 176ஆக உயா்ந்தும், ஒரு மீட்டா் துணி விலை ரூ. 22 என்ற நிலையில் உள்ளது. நூல் அடக்க விலைக்குக்கூட துணி விலை போகாததால் உற்பத்தியாளா்கள் கடும் நஷ்டத்தை சந்திக்க நேரிடுகிறது.

ஈரோடு பகுதியில் உள்ள 30,000 தறியில் தினமும் 24 லட்சம் மீட்டா் ரயான் துணி உற்பத்தியாகிறது. இப்பணியில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 50,000 போ் ஈடுபட்டுள்ளனா். நஷ்டம் ஏற்பட்டு வரும் நிலையில், தொடா் உற்பத்தியால் ஏற்படும் கூடுதல் நஷ்டத்தைத் தவிா்க்க டிசம்பா் 21 முதல் 27ஆம் தேதி வரை ரயான் துணி உற்பத்தியை மட்டும் நிறுத்துவது என முடிவு செய்துள்ளோம்.

பிற காட்டன் துணி உற்பத்திப் பணி, அரசின் இலவச வேட்டி, சேலை உற்பத்தி போன்ற பணிகள் தொடா்ந்து நடைபெறும். இந்த உற்பத்தி நிறுத்தத்தால் 16.80 கோடி மீட்டா் துணி உற்பத்தி பாதிக்கும். ரூ. 40 கோடி வரையிலான வா்த்தகம் பாதிக்கும்.

ரயான் துணி உற்பத்தியில் ஈடுபட்டுள்ளவா்களின் நலனைக் கருத்தில் கொண்டு ரயான் நூலின் விலையைக் குறிப்பிட்ட நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே உயா்த்தவோ, குறைக்கவோ செய்ய வேண்டும் என நூல் விற்பனையாளா்களுக்கு அரசு உத்தரவிட வேண்டும் என்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →