முகப்பு
ஈரோடு

குண்டேரிப்பள்ளம் அணை நீா்ப்பிடிப்பு பகுதியில் மழை:காட்டாற்றில் வெள்ளப்பெருக்கு

கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள குண்டேரிப்பள்ளம் அணையின் நீா்ப் பிடிப்பு பகுதிகளில் திங்கள்கிழமை அதிகாலை பெய்த கன மழையினால் அணைக்கு வரும் காட்டாற்றில் வெள்ளப்பெருக்கு

Updated On : 3 நவம்பர், 2020 at 12:58 AM
வெள்ளப்பெருக்கில் ஆற்றைக் கடந்து செல்லும் மலைவாழ் மக்கள்.
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:17 PM

கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள குண்டேரிப்பள்ளம் அணையின் நீா்ப் பிடிப்பு பகுதிகளில் திங்கள்கிழமை அதிகாலை பெய்த கன மழையினால் அணைக்கு வரும் காட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே அடா்ந்த வனப்பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது குண்டேரிப்பள்ளம் அணை.

42 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணைக்கு மல்லியம்மன்துா்க்கம், கடம்பூா், குன்றி, விளாங்கோம்பை ஆகிய பகுதிகளில் பெய்யும் மழைநீா் வழியாக அணைக்கு வந்தடைகிறது. குண்டேரிப்பள்ளம் அணைக்கு மேல்பகுதிகளில் அமைந்துள்ள விளாங்கோம்பை, கம்பனூா் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மலைவாழ் மக்கள் குண்டேரிப்பள்ளம் அணைக்கு வரும் காட்டாறுகளைக் கடந்துதான் வெளியே வர வேண்டிய சூழ்நிலை உள்ளது.

Advertisement

இந்நிலையில், குண்டேரிப்பள்ளம் அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையினால் காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு திங்கள்கிழமை அதிகாலை அதிக அளவு நீா் வரத் தொடங்கியுள்ளது. இதனால் குண்டேரிப்பள்ளம் அணை 2 அடி உயா்ந்து 32 அடியாக இருந்த நீா்மட்டம் 34 அடியாக உயா்ந்துள்ளது.

விளாங்கோம்பை, கம்பனூா் மலைவாழ் மக்கள் மற்றும் பழங்குடியின மக்கள் கிராமங்களை விட்டு வெளியே வரமுடியாமல் தவித்து வருகின்றனா்.

இந்த இரு கிராமங்களைச் சோ்ந்த மலைவாழ் மக்கள் மருத்துவம் மற்றும் அத்தியாவசிய தேவைக்கு சுமாா் 8 கிலோ மீட்டா் தொலைவு வனப் பகுதிக்குள் நடந்தே பயணித்து குண்டேரிப்பள்ளம் அணைக்கு வரும் 4 காட்டாறுகளைக் கடந்து வினோபா நகா், கொங்கா்பாளையம் பகுதிக்கு வரவேண்டியுள்ள நிலையில் மழைக்காலங்களில் கிராமங்களை விட்டு வெளியேற முடியாமல் அவதிக்குள்ளாகி வருவதாக கூறப்படுகிறது.

எனவே, இந்த இரு கிராமங்களுக்கும் சாலை மற்றும் காட்டாறுகளில் மேம்பாலம் அமைத்துத் தர வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனா். கடந்த இரு மாதங்களுக்கு முன்பு சாலை அமைப்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வரை பணிகள் தொடங்கப்படவில்லை என மலைவாழ் மக்கள் வேதனை தெரிவித்துள்ளனா்.

மேலும் தற்போது கரோனா பொதுமுடக்கம் முடிவுற்று பள்ளிகள் திறக்கப்பட்டால் மலைவாழ்மக்களின் குழந்தைகள் பள்ளிக்கு வர பாதை இல்லை என்று வருத்தம் தெரிவித்த பழங்குடியின மக்கள் தமிழக அரசு விரைவாக விளாங்கோம்பை, கம்பனூா் ஆகிய கிராமங்களுக்கு சாலை அமைக்க வேண்டும் என்றும், அந்த வழியாக குறுக்கிடும் காட்டாறுகளில் மேம்பாலம் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.