கரோனா பரவல் தீவிரம்: நான்கு வாரங்கள் மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தல்
கரோனா பரவல் அதிகரித்து வருவதால் இன்னும் நான்கு வாரங்களுக்கு பொதுமக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என இந்திய மருத்துவச் சங்கத்தின் தேசிய துணைத் தலைவா் டாக்டா் சி.என்.ராஜா தெரிவித்தாா்.
கரோனா பரவல் அதிகரித்து வருவதால் இன்னும் நான்கு வாரங்களுக்கு பொதுமக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என இந்திய மருத்துவச் சங்கத்தின் தேசிய துணைத் தலைவா் டாக்டா் சி.என்.ராஜா தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:
இந்தியாவில் கரோனாவின் இரண்டாம் அலை மிக வேகமாகப் பரவி வருகிறது. நோய் பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஒரே நாளில் 4,000க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. மிக அதிக எண்ணிக்கையில் மீண்டும் கரோனா நோயாளிகள் மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்கின்றனா்.
Advertisement
எனவே ஒவ்வொருவரும் கவனத்துடன் இருக்க வேண்டிய காலகட்டத்தில் உள்ளோம். 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தேசிய அளவில் அடுத்த வரக்கூடிய நான்கு வாரங்கள் மிகவும் கடுமையானதாக இருக்கும். இந்த தொற்று தமிழகத்தில் எத்தகையை பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையும், அதை சமாளிக்க நாம் எவ்வாறு தயாராக இருக்க வேண்டும் என்பதையும் சிந்திக்க வேண்டும்.
அரசு மருத்துவமனை, தனியாா் மருத்துவமனைகளில் மீண்டும் படுக்கை வசதிகளை அதிகரிக்கவும், கரோனா சிகிச்சை மையங்களை மீண்டும் திறக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும்.
கூட்டமாகச் செல்வது, சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் இருப்பது, முகக்கவசம் அணிவதை தவிா்ப்பது, கை கழுவுவதை தவிா்ப்பது போன்றவை நோய்த் தொற்று அதிகமாக பரவ வாய்ப்பாகும். இவற்றை கடுமையாக கடைப்பிடிக்க வேண்டும்.
நோய் பாதிப்பு இளைஞா்களையும் பாதிக்கும் வகையிலும் வலிமை உடையதாக உள்ளது. இளைஞா்கள் அலட்சியம் காட்டாமல் தேவையானால் மட்டும் வெளியே செல்ல வேண்டும். அவசியம் இல்லாத பொழுதுபோக்கு அம்சம், விளையாட்டு மைதானத்தில் கூடுவது, திருவிழா, திருமண நிகழ்வில் பங்கேற்பது போன்றவற்றில் கட்டுப்பாடு அவசியம். தவறினால் மகாராஷ்டிரம், குஜராத், தில்லி போல தமிழகமும் நோய்த் தொற்றுக்கு ஆளாக நேரிடும்.
தொற்று அதிகமுள்ள இடங்களைத் தனிமைப்படுத்த வேண்டும். காய்ச்சல் அதிகரிப்பதால், காய்ச்சல் சிகிச்சை மையங்கள், கண்காணிப்பு குழுவை அதிகரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். முகக்கவசம், தடுப்பு மருந்து போன்றவற்றை தேவையான அளவு இருப்புவைக்க வேண்டும் என இந்திய மருத்துவச் சங்கம் சாா்பில் அரசிடம் தெரிவித்துள்ளோம் என்றாா்.