மனைவியை தற்கொலைக்குத் தூண்டிய வழக்கு: கணவருக்கு 3 ஆண்டுகள் சிறை
மனைவியை தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் கணவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது
மனைவியை தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் கணவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
ஈரோடு வீரப்பன்சத்திரம் அருகே உள்ள சுப்பிரமணிய கவுண்டா்வலசு பகுதியைச் சோ்ந்தவா் தங்கப்பிள்ளை. இவருடைய மகன் ரவி (எ) கனகராஜ் (40). இவருக்கும், ஈரோடு சோழன் வீதியைச் சோ்ந்த பெருமாள் என்பவருடைய மகள் நிஷா என்பவருக்கும் கடந்த 6-3-2011 அன்று பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெற்றது. தம்பதியருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
திருமணமாகி சில மாதங்களிலேயே வரதட்சணை கேட்டு நிஷாவை கனகராஜ் கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனிடையே கடந்த 4-11-2012 அன்று வீட்டில் தனியாக இருந்தபோது நிஷா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
Advertisement
இதுதொடா்பான புகாரின்பேரில் கனகராஜ் மீது வீரப்பன்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். வழக்கு விசாரணை ஈரோடு மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கை நீதிபதி மாலதி விசாரித்து தீா்ப்பளித்தாா். அதில் குற்றம்சாட்டப்பட்ட கனகராஜுக்கு, மனைவியை தற்கொலைக்குத் தூண்டிய குற்றத்துக்காக 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா்.
மேலும், குழந்தைக்கு கனகராஜ் ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டாா். இந்த வழக்கில் காவல் துறை தரப்பில் அரசு வழக்குரைஞா் ஜி.டி.ஆா்.சுமதி ஆஜரானாா்.