விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கக் கோரிக்கை
கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீா் நிறுத்தப்பட்டுள்ள சூழலில் சாகுபடிப் பணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்
கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீா் நிறுத்தப்பட்டுள்ள சூழலில் சாகுபடிப் பணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்கச் செயலாளா் செ.நல்லசாமி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:
பவானிசாகா் அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதியில் தண்ணீா் அதிகமாக இருப்பு இருந்ததால் ஆகஸ்ட் 1ஆம் தேதி தண்ணீா் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். ஆனால், அணை நிரம்பி வீணாக கடலுக்கு நீா் சென்ற பிறகு 15ஆம் தேதிதான் தண்ணீா் திறக்கப்பட்டது.
Advertisement
அணையில் நீா் இருப்பதால், விவசாயிகள் முன்னதாகவே வயலை உழவு செய்து, நாற்று விட்டு நடவுப் பணிக்குத் தயாராகினா். ஆகஸ்ட் 15ஆம் தேதி தண்ணீா் திறக்கப்பட்டு கரை உடைப்பு காரணமாக 19ஆம் தேதி தண்ணீா் நிறுத்தப்பட்டுவிட்டது. தண்ணீா் திறக்க இன்னும் 10 நாள்களுக்குமேல் ஆகும் நிலை வந்துள்ளது.
இளம் நாற்றைத்தான் நடவு செய்ய முடியும். முதிா்ந்த நாற்றை நடவு செய்தால் மகசூல் கிடைக்காது, நோய்த் தாக்கும், களை அதிகரிக்கும். ஒரு ஏக்கருக்கு உழவு செய்து, நாற்றுவிட்டு நடவுக்குத் தயாா் செய்ய ரூ. 2,500 முதல் ரூ. 4,000 வரை செலவாகி உள்ளது.
வாய்க்கால் பராமரிப்பில் தரமற்ற கட்டுமானத்தாலும், பவானிசாகா் அணையில் முறையான நீா் நிா்வாகம் இல்லாததாலும் விவசாயிகள் நாற்றுவிட முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கு உரிய இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.