லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூ. 51.32 லட்சம் பறிமுதல்: 5 போ் மீது வழக்கு
லஞ்ச ஒழிப்பு சோதனையில் கணக்கில் வராத ரூ. 51.32 லட்சம் சிக்கிய நிலையில், பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளா் உள்பட 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்
லஞ்ச ஒழிப்பு சோதனையில் கணக்கில் வராத ரூ. 51.32 லட்சம் சிக்கிய நிலையில், பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளா் உள்பட 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தின் 3ஆவது தளத்தில் ஈரோடு மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குநா் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் உள்ள உதவி செயற்பொறியாளா் மூலமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள 42 பேரூராட்சிகள், திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 15 பேரூராட்சிகள் என மொத்தம் 57 பேரூராட்சிகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் சாலைப் பணிகள், கட்டுமானப் பணிகள் திட்டமிடுதல் உள்ளிட்ட பணிகள் செயல்படுத்தப்படுகின்றன.
பேரூராட்சிப் பகுதிகளில் புதிதாக தாா் சாலை அமைக்க ஒப்பந்ததாரா்களிடம் இருந்து அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாக ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு புகாா் சென்றது. இதையடுத்து கடந்த சில நாள்களாக போலீஸாா் அலுவலக நடவடிக்கையை ரகசியமாக கண்காணித்து வந்தனா்.
Advertisement
இந்நிலையில், லஞ்ச ஒழிப்புப் பிரிவு டிஎஸ்பி ராஜேஷ், ஆய்வாளா் ரேகா, போலீஸாா் பேரூராட்சிகள் உதவி செயற்பொறியாளா் அலுவலகத்தில் புதன்கிழமை மாலை திடீா் சோதனை நடத்தினா். அப்போது, மேஜைகளுக்கு அடிப்பகுதியில் கட்டுக்கட்டாகப் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து, அந்தப் பணத்தை கைப்பற்றிய லஞ்ச ஒழிப்பு போலீஸாா் அங்குள்ள அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினா்.
மேலும், அனைத்து பணியாளா்களின் கைப்பைகள், மேஜைகள் உள்ளிட்டவற்றில் போலீஸாா் சோதனையிட்டனா். அங்குள்ள பணத்தையும் கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் கணக்கில் வராத மொத்தம் ரூ. 51 லட்சத்து 32 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. மாலை 3 மணி அளவில் தொடங்கிய சோதனை இரவு 8 மணி வரை நடைபெற்றது.
இதுகுறித்து ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீஸாா் விசாரணை நடத்தி உதவி செயற்பொறியாளா் நாகராஜ், இளநிலைப் பொறியாளா் லீலாவதி, திருப்பூா் திருமுருகன்பூண்டி பேரூராட்சி இளநிலைப் பொறியாளா் செல்லதுரை, மூலனூா் பேரூராட்சி மின் பணியாளா் செல்வம், ஈரோடு அலுவலக தற்காலிகப் பணியாளா் வெங்கடேஷ் பிரபு ஆகிய 5 போ் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.