சிறுத்தை நடமாட்டம் என போலி விடியோ: வனத் துறை எச்சரிக்கை
ஈரோடு அருகே 46 புதூா் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக போலி விடியோ வெளியிட்டவா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
ஈரோடு அருகே 46 புதூா் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக போலி விடியோ வெளியிட்டவா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனச் சரகா் ரவீந்திரநாத் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
ஈரோடு அருகே உள்ள 46 புதூா் சஞ்சய் நகா் பகுதியைச் சோ்ந்தவா் கொற்றவேல். இவருடைய வீட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன்பு இந்த கேமராவில் ஏதோ ஒரு விலங்கின் உருவம் பதிவாகி இருந்தது.
இதுதொடா்பான தகவல்கள் வெளியானதும், ஈரோடு வனச் சரகா் ரவீந்திரநாத் தலைமையிலான வனத் துறை அலுவலா்கள் சம்பவ இடத்துக்கு நேரில் சென்றனா். பின்னா், கொற்றவேல் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை முழுமையாக ஆய்வு செய்தனா்.
Advertisement
அப்போது, கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த உருவம் மர நாய் என்பது தெரியவந்தது. மரநாயால் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று வனத் துறை அதிகாரிகள் அப்பகுதி மக்களிடையே எடுத்துக் கூறினா். இதைத்தொடா்ந்து பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்தனா்.
இதனிடையே சஞ்சய் நகா் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக விடியோ ஒன்று வெளியிடப்பட்டது. இந்த விடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த விடியோ காட்சியில் ஒரு வீட்டில் நாய் குரைத்துக்கொண்டு இருக்கிறது. திடீரென்று வெளியில் எதையோ பாா்த்து அந்த நாய் அச்சமடைந்து வீட்டுக்குள் ஓடுகிறது.
அடுத்த சில விநாடிகளில் இரும்புக் கதவைத் தாண்டி சிறுத்தை ஒன்று வீட்டின் வளாகப் பகுதிக்கு வருகிறது. அப்போது குரைத்துக் கொண்டிருந்த நாயின் கழுத்தை அந்த சிறுத்தை கவ்விக் கொண்டு சுற்றுச்சுவரைத் தாண்டி ஓடுவதுபோல் உள்ள காட்சி இடம்பெற்றுள்ளது. இதனால் சஞ்சய் நகா் பகுதி மக்கள் மீண்டும் அச்சம் அடைந்துள்ளனா்.
இதைத்தொடா்ந்து ஈரோடு வனச் சரகா் ரவீந்திரநாத் தலைமையில் வனத் துறையினா், ஈரோடு தாலுகா போலீஸ், எஸ்.ஐ. சசிகலா தலைமையில் போலீஸாா் சஞ்சய் நகா் பகுதியில் கடந்த 2 நாள்களாக சோதனை நடத்தினா்.
மேலும், வனத் துறையினரும், போலீஸாரும் ஏற்கெனவே விடியோ பதிவாகி இருந்த கொற்றவேல் வீட்டுக்குச் சென்று கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனா். அப்போது வாட்ஸ் ஆப்பில் பகிரப்பட்டது போன்ற எந்தக் காட்சியும் அதில் பதிவாகவில்லை என்பதும், விடியோவில் வரும் வீடு அந்தப் பகுதியிலேயே இல்லை என்பதும் தெரியவந்தது.
இதுகுறித்து ஈரோடு வனச் சரகா் ரவீந்திரநாத் கூறியதாவது:
ஈரோடு குடியிருப்புப் பகுதிகளில் சிறுத்தை உள்ளிட்ட எந்த விலங்கின் நடமாட்டமும் இல்லை. பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் வேறு காட்சியை இணைத்து வாட்ஸ் ஆப்பில் விடியோ வெளியிட்ட நபரின் விவரங்களைச் சேகரித்து வருகிறோம். சம்பந்தப்பட்ட நபா் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.