அம்மாபேட்டை: 9 மயில்கள் மர்மமான முறையில் உயிரிழப்பு
அம்மாபேட்டை அருகே விவசாய தோட்டத்தில் 9 மயில்கள் உயிரிழந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பவானி: அம்மாபேட்டை அருகே விவசாய தோட்டத்தில் 9 மயில்கள் உயிரிழந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை அருகேயுள்ள இலிப்பிலி, மூங்கில்பாளையத்தில் உள்ள விவசாயத் தோட்டத்தில் மயில்கள் இறந்து கிடப்பதாக அப்பகுதியினர் வியாழக்கிழமை மாலை சென்னம்பட்டி வனத்துறை அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த வனத்துறையினர் ஆய்வு செய்தபோது ஆங்காங்கே 9 பெண் மயில்கள் உயிரிழந்த நிலையில் கிடந்தது தெரியவந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த வனத்துறையினர் உயிரிழந்த மயில்களைக் கைப்பற்றி சென்னம்பட்டி வனத்துறை அலுவலகத்துக்கு எடுத்துச் சென்றனர்.
Advertisement
Advertisement
மயில்கள் உயிரிழப்பிற்கான காரணம் மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னரே தெரிய வரும். விவசாயிகள் யாரேனும் மயில்களால் வேளாண் விளைபொருட்கள் சேதப்படுத்தப்படுவதை தடுக்க விஷம் வைத்திருக்கலாம் என கருதப்படுகிறது.
விவசாய நிலத்தில் அடுத்தடுத்து 9 மயில்கள் உயிரிழந்த நிலையில் கிடந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.