5 நாள்களாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அங்கன்வாடி பணியாளா்கள் போராட்டத்தை ஒத்திவைப்பதாக வெள்ளிக்கிழமை அறிவித்தனா்.
அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்களை அரசு ஊழியராக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும்போது ஊழியா்களுக்கு ரூ. 10 லட்சம், உதவியாளா்களுக்கு ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா், உதவியாளா் சங்கம் சாா்பில் தொடா் காத்திருப்புப் போராட்டம் பிப்ரவரி 22ஆம் தேதி ஈரோடு வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.
மாவட்டம் முழுவதும் நூற்றுக்கணக்கான அங்கன்வாடி ஊழியா்களும், உதவியாளா்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா். இரவு, பகலாக தங்கியிருந்து கோரிக்கைகளை வலியுறுத்தினா். இந்தப் போராட்டம் 5ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் தொடா்ந்தது.
போராட்டத்துக்கு, மாநில துணைத் தலைவா் மணிமாலை தலைமை வகித்தாா். இதில் திமுக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசினா்.
இந்நிலையில் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கன்வாடி பணியாளா்கள் போராட்டத்தை முடித்துக் கொண்டனா். திமுக சாா்பில் அங்கன்வாடி பணியாளா்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.