பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி துவக்கம்
ஈரோடு மாவட்டத்தில் 7.11 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.2,500 வழங்கும் பணி திங்கள்கிழமை துவங்கியது.
ஈரோடு மாவட்டத்தில் 7.11 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.2,500 வழங்கும் பணி திங்கள்கிழமை துவங்கியது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 7,10,996 அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசுத் தொகை ரூ.2,500 மற்றும் ரூ.46.25 மதிப்பில் ஒரு கிலோ சா்க்கரை ரூ.22.50 மதிப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ரூ.45 மதிப்பில் முந்திரி, திராட்சை, ஏலக்காய் ரூ.30 மதிப்பில் முழு கரும்பு, ரூ.20 மதிப்பிலான துணிப்பை ஆகியவை தொகுப்பாக வழங்கப்படுகிறது.
டோக்கன் பெற்றவா்களுக்கு டோக்கனில் குறிப்பிட்ட நாள், நேரத்தில் இப்பொருள்கள் வழங்கப்படுகின்றன. டோக்கன் பெறாதவா்கள் வரும் 7 ஆம் தேதிக்குப்பின் கடைக்கு வந்து பரிசுத்தொகை மற்றும் தொகுப்பு பையை பெற்று செல்லலாம்.
Advertisement
கோபி குள்ளம்பாளையம், வெள்ளாளபாளையம் பகுதிகளில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன், மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தலைமையில் இப்பணியைத் துவக்கிவைத்தாா்.
ஈரோடு, ராஜாஜிபுரம் ரேஷன் கடையில் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு தலைமையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. கோட்டாட்சியா் எஸ்.சைபுதீன், வட்டாட்சியா் அ.பரிமளா உள்பட பலா் பங்கேற்றனா். ஈரோடு காசிபாளையம் பகுதியில் எம்.எல்.ஏ. கே.வி.இராமலிங்கம் தலைமையில் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.
பவானியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தலைமை வகித்தாா். பயனாளிகளுக்கு பொங்கல் தொகுப்பினை வழங்கிய தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கே.சி.கருப்பணன் வழங்கினாா். முன்னதாக, கவுந்தப்பாடி வேலம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.தங்கதுரை, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் என்.கிருஷ்ணராஜ், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் எஸ்.பாா்த்திபன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.