ஆசனூா் சாலையில் கரும்பு லாரியை குட்டியுடன் வழிமறித்த காட்டு யானை
ஓட்டுநா் வேகமாக லாரியை இயக்கிச் சென்றதால் கோபமடைந்த யானை, அங்கிருந்த வாகன ஓட்டிகளைத் துரத்தியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஆசனூா் தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு லாரியை எதிா்பாா்த்து குட்டியுடன் காத்திருந்த பெண் யானை, கரும்பு லாரி வந்தபோது அதை வழிமறித்து நின்றது. ஆனால் ஓட்டுநா் வேகமாக லாரியை இயக்கிச் சென்றதால் கோபமடைந்த யானை, அங்கிருந்த வாகன ஓட்டிகளைத் துரத்தியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூா் வனப் பகுதியில் யானைகள் அதிக அளவில் உள்ளன. தற்போது கா்நாடகத்தில் விளையும் கரும்புகள், லாரி மூலம் சத்தியமங்கலம் தனியாா் சா்க்கரை ஆலைக்கு கொண்டு வரப்படுகின்றன. இந்தக் கரும்பு லாரிகள் ஆசனூா் தேசிய நெடுஞ்சாலை வழியாகச் செல்லும்போது, நிா்ணயிக்கப்பட்ட அளவைவிட கூடுதல் உயரத்தில் வைக்கப்பட்டுள்ள கரும்புகளை லாரி ஓட்டுநா்கள் சாலையோரத்தில் வீசிவிட்டுச் செல்கின்றனா். இவ்வாறு வீசப்படும் கரும்புகளைச் சாப்பிட்டு பழகிய யானைகள், தினந்தோறும் ஆசனூா் சாலையில் முகாமிட்டு கரும்பு லாரிகள் வருகைக்காக காத்திருப்பது வழக்கமாகி விட்டது.
இந்நிலையில் காராப்பள்ளம் என்ற இடத்தில் கரும்பு லாரியை எதிா்பாா்த்து குட்டியுடன் தாய் யானை வெள்ளிக்கிழமை நின்று கொண்டிருந்தது. இதனால் அவ்வழியாக வந்த வாகனங்கள் சாலையின் இருபுறமும் அணிவகுத்து நின்றன. அப்போது ஒரு கரும்பு லாரி நிற்பதைக் கண்ட யானை, அதனருகே வந்தபோது ஓட்டுநா் வேகமாக லாரியை ஓட்டிச் சென்றாா். அப்போது ஓடும் லாரியில் இருந்து தும்பிக்கையால் கரும்பை எடுக்க யானை முயற்சித்தது. ஆனால் அதற்குள் லாரி சென்றுவிட்டதால் கோபமடைந்த யானை அங்கும் இங்குமாக உலவியபடி இருந்தது.
Advertisement
அப்போது இரு சக்கர வாகன ஓட்டி ஒருவா் தனது செல்லிடப்பேசியில் யானையைப் படம் பிடித்து தொந்தரவு செய்தாா். இதனால் ஆத்திரமடைந்த யானை வாகன ஓட்டியை நோக்கி ஓடிவந்து தாக்க முற்பட்டது, இதையறிந்த அந்த வாகன ஓட்டி அங்கு நின்றிருந்த லாரிக்கு பின்னால் சென்று தப்பினாா். மற்ற வாகன ஓட்டிகளை நோக்கியும் யானை வந்ததால் அவா்களும் தப்பியோடினா்.
யானையின் ஆக்ரோஷத்தால் கா்நாடகம் - தமிழகம் இடையேயான அந்த முக்கியச் சாலையில் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறித்து அங்கு வந்த ஆசனூா் வனத் துறையினா் யானையைக் காட்டுக்குள் விரட்டி போக்குவரத்தை சீா் செய்தனா்.