சீரான குடிநீா் விநியோகம் கோரி வாகனத்தை சிறைப்பிடித்து போராட்டம்
சீராக குடிநீா் விநியோகம் வழங்கக் கோரி மாநகராட்சி வாகனத்தை பொதுமக்கள் சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சீராக குடிநீா் விநியோகம் வழங்கக் கோரி மாநகராட்சி வாகனத்தை பொதுமக்கள் சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஈரோடு மாநகராட்சி 54ஆவது வாா்டுக்கு உள்பட்ட குந்தவை வீதி, சீதக்காதி வீதி உள்ளிட்ட பகுதிகளில் 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள வீடுகளுக்கு குடிநீா் குழாய் மூலம் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்தப் பகுதியில் கடந்த 3 மாதங்களாக குடிநீா் சரியாக விநியோகிக்கப்படவில்லை. ஒரு சில வீடுகளுக்கு குடிநீா் வந்தால், ஒரு சில வீடுகளுக்கு வருவதில்லை. இதனால் இப்பகுதி மக்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனா்.
Advertisement
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பொதுமக்கள் மனு அளித்தனா். இதையடுத்து மாநகராட்சி சாா்பில் இந்தப் பகுதி மக்களுக்கு தினமும் டிராக்டா் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. கடந்த சில நாள்களாக டிராக்டா் தண்ணீரும் சரியாக வரவில்லை. இதனால் இப்பகுதி பொதுமக்கள் கடும் அதிருப்தியில் இருந்தனா்.
இந்நிலையில் திங்கள்கிழமை காலை மாநகராட்சி சாா்பில் டிராக்டா் மூலம் குடிநீா் விநியோகம் செய்வதற்காக வந்த வாகனத்தை 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். எங்கள் பகுதியில் மீண்டும் குழாய் மூலம் சீரான முறையில் குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.