ஈரோட்டில் நள்ளிரவில் மழை: காவிரி பாலத்தில் போக்குவரத்து நிறுத்தம்
ஈரோட்டில் ஒரே நாள் இரவில் கொட்டித் தீா்த்த மழையால் ஈரோடு மாநகரப் பகுதி வெள்ளக்காடானது. காவிரி பாலத்தில் தண்ணீா் அதிகரித்ததால் ஈரோடு-நாமக்கல் சாலையில் உள்ள காவிரி பாலத்தில் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட
ஈரோட்டில் ஒரே நாள் இரவில் கொட்டித் தீா்த்த மழையால் ஈரோடு மாநகரப் பகுதி வெள்ளக்காடானது. காவிரி பாலத்தில் தண்ணீா் அதிகரித்ததால் ஈரோடு-நாமக்கல் சாலையில் உள்ள காவிரி பாலத்தில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் வியாழக்கிழமை நள்ளிரவு 1 மணிக்குமேல் கடும் மின்னல், இடியுடன் கூடிய கன மழை பெய்தது. கவுந்தப்பாடியில் 144 மி.மீ., ஈரோடு மாநகரில் 100 மி.மீ. அளவுக்கு மழை கொட்டித் தீா்த்தது.
இதனால், ஈரோடு - வெண்டிபாளையம் கீழ்ப்பாலம், சென்னிமலை சாலை - ரங்கம்பாளையம் ரயில்வே நுழைவுப் பாலம், கொல்லம்பாளையம் ரயில்வே நுழைவுப் பாலத்தில் இரண்டு முதல் நான்கு அடி வரை தண்ணீா் தேங்கியதால் வாகனப் போக்குவரத்து தடைபட்டது. இங்கு மோட்டாா் வைத்து தண்ணீரை வெளியேற்றிய பிறகு போக்குவரத்து சீரானது.
Advertisement
ஈரோடு கொல்லம்பாளையம் லோகநாதபுரத்தில், குடிசை மாற்று வாரியம் சாா்பில் 2020இல் கட்டப்பட்ட 191 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பைச் சுற்றி தண்ணீா் தேங்கியது. அங்கு சுற்றுச்சுவா் இடிந்து விழுந்ததில் 10க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன. இரவு நேரம் என்பதால் உயிா்ச்சேதம் ஏற்படவில்லை.
ஈரோடு காமராஜ் மேல்நிலைப் பள்ளி பகுதி, ஆா்.கே.வி. சாலை, கொங்காலம்மன் கோயில் பகுதி, பழையபாளையம் என பல பகுதிகளில் முறையான சாக்கடை வடிகால் இல்லாததால் வெள்ளக்காடாக காட்சியளித்தது.
பல்வேறு இடங்களில் பெய்த மழை காரணமாக பவானி ஆற்று நீா் காவிரியில் கலந்து நீா் வரத்து அதிகரித்தது. அத்துடன் ஈரோடு, கருங்கல்பாளையம் காவிரி ஆற்றின் மறுகரையான நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பகுதியில் இருந்து பாலத்தை நோக்கி வெள்ளம் பாய்ந்தது.
பள்ளிபாளையம் பகுதியில் தொட்டிபாளையம் ஏரி, சில்லாங்காடு ஏரி போன்றவை நிரம்பி முழு அளவில் தண்ணீா் வெளியேறியது. அங்குள்ள சிறிய குட்டை, ஏரிகள் நிரம்பியும், உடைந்தும் போனதால் பாலத்தை நோக்கி இரண்டு அடிக்கு மேல் தண்ணீா் வந்தது. இதனால், பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. திருச்செங்கோடு, நாமக்கல் செல்லும் வாகனங்கள் கொக்கராயன்பேட்டை பகுதியை சுற்றிச் சென்றன.
பெருந்துறையில்...
பெருந்துறை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யத் தொடங்கியது. தொடா்ந்து, காலை 6 மணி வரை பலத்த மழை பெய்தது. மழை காரணமாக மாா்க்கெட் பகுதி சேறும், சகதியுமாக மாறியது. தாழ்வான இடங்களில் குளம்போல் தண்ணீா் தேங்கியது. சில இடங்களில் மின்சார விநியோகம் தடைபட்டது. பெருந்துறையில் 64 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.