ஈரோடு: நிதி நிறுவனம் நடத்தி ரூ.4.73 கோடி மோசடி செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை
நிதி நிறுவனம் நடத்தி ரூ.4.73 கோடி மோசடி செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நிதி நிறுவனம் நடத்தி ரூ.4.73 கோடி மோசடி செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஈரோடு மாவட்டம், மாணிக்கம்பாளையம் சாலை நேதாஜி நகரைச் சேர்ந்தவர் வெ.செல்லமுத்து (50). இவரது மனைவி பராசக்தி, மேட்டூர் அணை பகுதியைச் சேர்ந்த குருசாமி, ஈரோடு ஷேக் தாவூத் வீதியைச் சேர்ந்த நரசிம்மலு, பெங்களூருவைச் சேர்ந்த கிரிஷ்குமார், ஈரோடு சக்தி நகரைச் சேர்ந்த ஞானவேல் ஆகியோர் கூட்டாகச் சேர்ந்து அன்னை இன்போடெக் என்ற நிறுவனத்தை 2009ஆம் ஆண்டு ஆரம்பித்தனர்.
இதையும் படிக்கலாமே.. செல்ஃபி எடுக்கும் போது 140 அடி பள்ளத்தில் விழுந்தவருக்கு அடித்த அதிர்ஷ்டம்
Advertisement
இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் 24 சதவீதம் வட்டி தருவதாக நாளிதழ்களில் விளம்பரம் செய்தனர். இதை நம்பி 118 முதலீட்டாளர்கள் ரூ.4 கோடியே 73 லட்சத்து 94 ஆயிரத்து 803ஐ முதலீடு செய்தனர். ஆனால், உறுதி அளித்தபடி பணத்தை திருப்பித் தரவில்லை. இதையடுத்து செல்லமுத்துவின் நிறுவனத்தில் முதலீடு செய்த நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழரசு என்பவர் அளித்தப் புகாரின் பேரில் ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு காவலர்கள் வழக்குப் பதிவு செய்து செல்லமுத்து உள்ளிட்ட 6 பேரையும் 2010-ஆம் ஆண்டு கைது செய்தனர்.
இந்த வழக்கு கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. விசாரணை முடிவில் செல்லமுத்து மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதையடுத்து அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.4 கோடியே 75 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி ஏ.எஸ்.ரவி திங்கள்கிழமை தீர்ப்பளித்தார். வழக்கில் தொடர்புடைய மற்ற ஐந்து பேர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததையடுத்து அவர்களை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.