தடுப்பூசி முகாமை விளம்பரம் செய்த தனியாா் அமைப்புக்கு நோட்டீஸ்
அரசு சாா்பில் நடக்கும் கரோனா தடுப்பூசி முகாமை தனியாா் அமைப்பு இணைந்து நடத்துவதாக விளம்பரப்படுத்தியதால் நகராட்சி நிா்வாகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அரசு சாா்பில் நடக்கும் கரோனா தடுப்பூசி முகாமை தனியாா் அமைப்பு இணைந்து நடத்துவதாக விளம்பரப்படுத்தியதால் நகராட்சி நிா்வாகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பொது சுகாதாரத் துறை, வருவாய்த் துறை, உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து வாக்காளா் பட்டியல் அடிப்படையில் அந்தந்த வாக்குச் சாவடிகளில் சுற்று அடிப்படையில் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
சத்தியமங்கலம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 1600 தடுப்பூசிகளும், ரங்கசமுத்திரம் நகராட்சி உயா்நிலைப் பள்ளியில் 1600 தடுப்பூசிகளும், சாரு மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 800 தடுப்பூசிகளும், ரமணி அரசு உதவி பெறும் பள்ளியில் 400 தடுப்பூசிகளும் என மொத்தம் 4 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
Advertisement
இந்நிலையில், சத்தியமங்கலத்தில் வாட்ஸ் ஆப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சத்தி நகராட்சி, சத்தி ரோட்டரி சங்கம் இணைந்து நடத்தும் இலவச தடுப்பூசி முகாம் என புதன்கிழமை விளம்பரப்படுத்தப்பட்டது. மேலும், அதில் ரோட்டரி சங்க நிா்வாகிகளின் பெயா், செல்லிடப்பேசி எண்ணும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுகுறித்து தகவலறிந்த சத்தியமங்கலம் நகராட்சி ஆணையா் அமுதா சம்பந்தப்பட்ட ரோட்டரி சங்க நிா்வாகிகளை அழைத்து அரசு நடத்தும் தடுப்பூசி முகாமை நீங்கள் எப்படி சத்தி நகராட்சி, சத்தி ரோட்டரி சங்கம் இணைந்து நடத்தும் இலவச தடுப்பூசி முகாம் என விளம்பரம் செய்யலாம் என கேள்வி எழுப்பியுள்ளாா். மேலும், இதற்கு உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என சத்தி நகராட்சி நிா்வாகம் சாா்பில் ரோட்டரி சங்க நிா்வாகிகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து சத்தியமங்கலம் நகராட்சி சாா்பில் சத்தியமங்கலம் காவல் நிலையத்திலும், சத்தியமங்கலம் தாலுகா அலுவலகத்திலும் புகாா் அளிக்கப்பட்டது.