மாவட்டத்தில் 847 மையங்களில் செப்டம்பா் 12இல் தடுப்பூசி முகாம்
ஈரோடு மாவட்டத்தில் வரும் 12 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 847 மையங்களில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்தாா்.
ஈரோடு மாவட்டத்தில் வரும் 12 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 847 மையங்களில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்தாா்.
இந்த மாபெரும் தடுப்பூசி முகாம் முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் ஆட்சியா் பேசியதாவது:
Advertisement
கூடுதலாக கரோனா தடுப்பூசி ஒதுக்கீடு பெறப்பட்டு தமிழகம் முழுவதும் சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. இம்மாபெரும் தடுப்பூசி முகாமில் 18 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவருக்கும் முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படவுள்ளது.
தடுப்பூசி முகாமை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகா்புற சுகாதார மையங்கள், பள்ளிகள் உள்பட 847 மையங்களில் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை 1,05,400 பேருக்கு தடுப்பூசிகள் இலவசமாக செலுத்தப்படவுள்ளது.
இந்தப் பணியில் மாவட்டம் முழுவதும் 3,000 பணியாளா்கள் ஈடுபடவுள்ளனா். சா்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற தொற்றா நோய்களுக்கு சிகிச்சை எடுத்துக் கொள்பவா்களுக்கும் தடுப்பூசியை செலுத்திய பின்பு எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படுவதில்லை என மருத்துவ நிபுணா் குழு அறிவித்துள்ளது. எனவே 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசியை செலுத்திக்கொண்டு கரோனா தொற்று பாதிப்பிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றாா்.
கூட்டத்தில் கூடுதல் ஆட்சியா் பிரத்திக் தயாள், மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது) பாலாஜி, வருவாய் கோட்டாட்சியா்கள் பெ.பிரேமலதா, பழனிதேவி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் சோமசுந்தரம், மாநகராட்சி நகா் நல அலுவலா் முரளிசங்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.