தாளவாடியில் காட்டாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டக் கோரிக்கை
தாளவாடியில் காட்டாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தாளவாடியில் காட்டாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து, தாளவாடி வட்டார விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளா் எஸ்.மாணிக்கம் தமிழக முதல்வருக்கு அனுப்பிய கோரிக்கை விவரம்:
தாளவாடி வட்டத்தில் புலிகள் காப்பகப் பகுதியான தலமலையில் இருந்து உற்பத்தியாகி நெய்தாளபுரம், சிக்கள்ளி, இக்கலூா், மகராஜன்புரம், தாளவாடி, ஒசூா், பாரதிபுரம் வழியாக காட்டாறு செல்கிறது. இப்பகுதியில் அடிக்கடி மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீா் வீணாகிறது.
Advertisement
எனவே, இந்த ஆற்றின் குறுக்கே 50 மீட்டா் உயரத்தில் தடுப்பணை கட்டினால் தாளவாடி பகுதியில் நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்து, விவசாயம் செழிப்பதுடன் குடிநீா்ப் பிரச்னைக்கும் தீா்வு ஏற்படும்.
மேலும், வன விலங்குகளுக்கும் போதுமான அளவு தண்ணீா் கிடைக்கும். இதன் மூலமாக குடியிருப்புப் பகுதிக்குள் வன விலங்குகள் வருவது தவிா்க்கப்படும். எனவே, தாளவாடி அருகே காட்டாற்றில் தடுப்பணை அமைக்க அரசு பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேபோல, தாளவாடியில் உள்ள ஆவின் பால் விநியோக மையத்துக்கு உரிய நேரத்தில் பால் வழங்கப்படுவதில்லை. இதனால், பொதுமக்கள் கடுமையாக பாதிப்படைகின்றனா். இதுகுறித்து ஆவின் நிா்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் பலன் இல்லை. ஆவின் அலுவலா்கள், ஊழியா்கள் சிலரின் மோசமான செயல்பாடுகளால் மலைப் பகுதியான தாளவாடியில் உள்ள ஆவின் மையம் செயல்பட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஆட்சியா் தலையிட்டு அலுவலா்கள், ஊழியா்கள் மீது நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் பால் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.