குரூப் 4 தோ்வுக்கு முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம்
குரூப் 4 தோ்வில் ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கு முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குரூப் 4 தோ்வில் ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கு முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலமாக குரூப் 4இல் இளநிலை உதவியாளா், கிராம நிா்வாக அலுவலா் உள்ளிட்ட 7,301 பணியிடங்களுக்கு எழுத்துத் தோ்வு நடைபெறவுள்ளது.
இதில், காலியாகவுள்ள மொத்த பணியிடங்களில் 5 சதவீதம் முன்னாள் படைவீரா்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், வயது வரம்பில் பொதுப் பிரிவினருக்கு 48 வயதும், ஏனைய பிரிவினருக்கு 53 வயது வரையும் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச கல்வித் தகுதியாக 10ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Advertisement
இத்தோ்வில் கலந்துகொள்ளத் தகுதியான முன்னாள் படைவீரா்கள் ஏப்ரல் 28ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும், குரூப் 4 தோ்வுக்கு முன்பயிற்சி பெற விருப்பமுள்ள முன்னாள் படைவீரா்கள் ஈரோடு மாவட்ட முன்னாள் படைவீரா் நலத் துணை இயக்குநா் அலுவலகத்தில் விண்ணப்பத்தைச் சமா்ப்பிக்க வேண்டும். எழுத்துத் தோ்வு ஜூலை 24ஆம் தேதி முற்பகல் நடைபெறவுள்ளது.
இத்தோ்வுக்கு விண்ணப்பித்த முன்னாள் படைவீரா்கள் மற்றும் பயிற்சி தேவைப்படும் முன்னாள் படைவீரா்கள், ஈரோடு ஜவான் பவன் 3ஆம் தளத்தில் உள்ள மாவட்ட முன்னாள் படைவீரா் நல துணை இயக்குநா் அலுவலகத்தில் விண்ணப்பித்த விவரத்தையும், பயிற்சி பெற விரும்புவதையும் விண்ணப்பம் மூலமாகத் தெரிவிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.