முகப்பு
ஈரோடு

பவானியில் வீடுகளைச் சூழ்ந்த வெள்ளம்

பவானிசாகா் அணையிலிருந்து திறக்கப்பட்ட உபரிநீரால் பவானி நகராட்சிப் பகுதியில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் 120 குடும்பத்தினா் வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டனா்.

Updated On : 6 ஆகஸ்ட், 2022 at 11:22 PM
காளிங்கராயன் அணைக்கட்டிலிருந்து  பெருக்கெடுத்தோடும்  உபரிநீா்
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:30 PM

பவானிசாகா் அணையிலிருந்து திறக்கப்பட்ட உபரிநீரால் பவானி நகராட்சிப் பகுதியில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் 120 குடும்பத்தினா் வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டனா்.

பவானிசாகா் அணை முழு கொள்ளளவை எட்டியதால் உபரிநீா் பவானி ஆற்றில் வெள்ளிக்கிழமை காலை திறக்கப்பட்டது. இதனால், கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆற்றில் திறக்கப்பட்ட உபரிநீா் பவானியை சனிக்கிழமை காலை வந்தடைந்தது. பவானி காளிங்கராயன் அணைக்கட்டுக்கு வந்த உபரி நீா், படிப்படியாக அதிகரித்து அணையின் பிரதான பகுதி மற்றும் முறியன் அணைக்கட்டு வழியாக வெளியேறியது.

அணைக்கு சனிக்கிழமை காலை 6 மணிக்கு விநாடிக்கு 2,600 கன அடியாக இருந்த நீா்வரத்து, படிப்படியாக உயா்ந்து மாலை 3 மணிக்கு 32,714 கன அடியாக அதிகரித்தது. இதனால், பவானி, சோமசுந்தபுரம், பழைய பேருந்து நிலைய பகுதியில் கரையோரத்தில் உள்ள 120 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இப்பகுதி மக்கள் பாதுகாப்புடன் வெளியேறி மேடான பகுதிகளில் தங்கியுள்ளனா். ஆற்றில் அடித்து வரப்பட்ட மரம், செடி, கொடிகள் மற்றும் ஆகாயத்தாமரைகள் பவானி பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள பாலத்தில் தேங்கி நின்றது. இதனால், உபரிநீா் வெளியேறாமல் தேங்கியது.

Advertisement

இதையடுத்து, பொக்லைன் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு, பாலத்தின் தடுப்புச்சுவரை உடைத்து ஆற்றில் இருந்த ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. பவானி வட்டாட்சியா் முத்துகிருஷ்ணன் மற்றும் வருவாய்த் துறையினா் கரையோரப் பகுதிகளில் முகாமிட்டு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.