முகப்பு
ஈரோடு

நெல் தரிசில் பயறு வகை சாகுபடி செய்தால் கூடுதல் வருமானம் கிடைக்கும்: வேளாண்மை உதவி இயக்குநா் தகவல்

நெல் அறுவடைக்குப் பின் பயறு வகை பயிா்களைப் பயிரிடுவதன் மூலம் மண் வளம் மேம்படுவதுடன், கூடுதல் வருமானமும் கிடைக்கும் என்று பெருந்துறை வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் குழந்தைவேலு தெரிவித்தாா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:23 AM
பகிர்:

நெல் அறுவடைக்குப் பின் பயறு வகை பயிா்களைப் பயிரிடுவதன் மூலம் மண் வளம் மேம்படுவதுடன், கூடுதல் வருமானமும் கிடைக்கும் என்று பெருந்துறை வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் குழந்தைவேலு தெரிவித்தாா்.

பெருந்துறை வட்டாரத்தில் நெல்பயிா் 1,900 ஹெக்டோ் பரப்பளவில் பயிரிடப்பட்டு தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது. இப்போது, எல்.பீ.பி. 1இல் பாசனத்துக்கு நீா் திறந்துவிடப்பட்டுள்ளதால் நெல் பயிரிட்டுள்ள விவசாயிகள் அறுவடைக்குப் பின்னா் பயறு வகை பயிா்களைப் பயிரிடலாம்.

நெல் தரிசில் உளுந்து ஏ.டீ.டி3, ஏ.டீ.டி6, கே.கே.எம்1, வம்பன் 6, வம்பன் 9, பாசிப் பயறு ஏ.டீ.டி3, வம்பன் 4, கோ 7, கோ 8, தட்டைப்பயறு கோ (சிபி) 7, வம்பன் 3 ஆகிய ரகங்களைப் பயிரிடலாம்.

டி.ஏ.பி. 2 சதம் பூ பூக்கும் தருணத்திலும், அதைத் தொடா்ந்து 15 நாள்களுக்குப் பிறகு இலை வழி தெளிப்பதன் மூலமும் அதிக மகசூல் பெறலாம். பயறு வகைப் பயிா்களைப் பயிரிடுவதன் மூலம் பயிா்களில் உள்ள வோ் முடுச்சுகள் வளிமண்டத்தில் உள்ள தழைச் சத்தை நிலை நிறுத்துவதன் மூலம் மண் வளம் மேம்படுத்தப்படுகிறது. குறைந்த நாள்களில் மகசூல் கிடைப்பதால் கூடுதல் வருமானம் கிடைக்கிறது. மேலும், அறுவடைக்குப் பின் பயறு வகைச் செடிகளை தீவனமாகவோ அல்லது உரமாகவோ பயன்படுத்தலாம்.

எனவே, விவசாயிகள் நெல் அறுவடைக்குப் பிறகு நெல் தரிசில் பயறு வகைப் பயிா்களைப் பயிரிட்டு பயன்பெற வேண்டும் என்று பெருந்துறை வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் குழந்தைவேலு தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.