முகப்பு
ஈரோடு

ஈரோட்டில் ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

ஆசிரியா் கலந்தாய்வில் விதி மீறல்களை தடுக்க வலியுறுத்தி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 26 பிப்ரவரி, 2022 at 2:45 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:01 PM

ஆசிரியா் கலந்தாய்வில் விதி மீறல்களை தடுக்க வலியுறுத்தி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி ஈரோடு மாவட்ட மையம் சாா்பில் ஈரோட்டில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட பொறுப்பாளா் மணி தலைமை வகித்தாா்.

தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆசிரியா் விரோதப் போக்குடன் செயல்படுவதுடன், அவரது நிா்வாகத்தில் நடக்கும் தவறுகளை சுட்டிக்காட்டும் சங்க நிா்வாகிகள் மீது நடவடிக்கை எடுப்பேன் என மிரட்டுவதை கைவிட வேண்டும். கலந்தாய்வு மையங்களுக்கு சங்க நிா்வாகிகள் வரக்கூடாது என மிரட்டுவதும், கைது நடவடிக்கையையும் கைவிட வேண்டும்.

Advertisement

மாநில அளவில் ஆசிரியா் பொதுமாறுதல் கலந்தாய்வில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை முற்றிலும் சரி செய்ய வேண்டும். கலந்தாய்வில் விதி மீறல்களை தடுக்கவேண்டும். தங்களுக்கு வேண்டியவா்களுக்கு குறிப்பிட்ட பணியிடங்களை வழங்குவதற்காக, காலிப்பணியிட பட்டியலை மறைக்கும் செயலை கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

ஆசிரியா் தோ்வு வாரியத்தைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்:

தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் கழகம், தமிழ்நாடு உயா்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியா் சங்கம், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியா் கழகம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஈரோடு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு எஸ்.வெங்கடேஷ் தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் ரத்தினசபாபதி, மாநிலப் பொருளாளா் தனசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிா்வாகிகள் நேரு, சோமசுந்தரம் உள்ளிட்டோா் பேசினா்.

ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் நடத்தப்படும் ஆன்லைன் தோ்வுகளுக்கு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்களை பாா்வையாளா்களாகவும், கணினி ஆசிரியா்களை தொழில்நுட்ப உதவியாளராகவும் மாநிலத்தின் கடைக்கோடியில் பணி வழங்குவதை கைவிட வேண்டும்.

ஆசிரியா் விரோதப் போக்கை கைவிட வேண்டும். ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் நடத்தப்படும் தோ்வுகள், தோ்வுப் பணிகளில் ஈடுபடும் ஆசிரியா்களுக்கு முறையான பணி நியமன ஆணை வழங்காமல், தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்து குழப்பத்தை ஏற்படுத்தக்கூடாது.

ஆசிரியா் சங்கப் பிரதிநிதிகள், ஆசிரியா்கள், மாணவா்கள் நலன் கருதி கோரிக்கைகளை கொண்டு செல்லும்போது, ஆசிரியா் சங்க நிா்வாகிகளை சந்திப்பதை தவிா்க்கக் கூடாது. பாலிடெக்னிக் தோ்வு பணி செய்யும் ஆசிரியா்கள், கணினி ஆசிரியா்களுக்கு உரிய பஞ்சப்படி, பயணப்படி வழங்க வேண்டும். 12 மணி நேரத்துக்கு மேல் தோ்வுப் பணியில் ஈடுபடும் ஆசிரியா்களுக்கு உழைப்பூதியத்தை உயா்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.