சென்னிமலை அருகே கொள்முதல் நிலையம் மூலம் 6 ஆயிரம் நெல் மூட்டைகள் விற்பனை
சென்னிமலை அருகே உள்ள கொள்முதல் நிலையம் மூலம், விவசாயிகளின் 6 ஆயிரம் நெல் மூட்டைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
சென்னிமலை அருகே உள்ள கொள்முதல் நிலையம் மூலம், விவசாயிகளின் 6 ஆயிரம் நெல் மூட்டைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஈரோடு மாவட்டத்தில் 33 இடங்களில், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடங்கப்பட்டு, விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அதேபோல, சென்னிமலை அருகே உள்ள வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வேளாண் பொருள்களை 2 ஆயிரம் மெட்ரிக் டன் அளவில் இருப்பு வைக்கும் வகையில் கிடங்கு வசதி உள்ளது.
இங்கு, தற்போது நெல் கொள்முதல் நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த கொள்முதல் நிலையத்தில் சுமாா் 6 ஆயிரம் நெல் மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வந்து விற்பனை செய்துள்ளனா். சென்னிமலை ஒன்றியத்துக்கு உள்பட்ட எக்கட்டாம்பாளையம், எல்லைக்கிராமம், பசுவபட்டி ஆகிய ஊராட்சிப் பகுதிகளில் இருந்து விவசாயிகள் நெல் மூட்டைகளை கொண்டு வந்து, இங்கு விற்பனை செய்கின்றனா்.
இது குறித்து விவசாயிகள் கூறும்போது, வெப்பிலி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்யப்படும் நெல்லுக்கு உரிய விலை கிடைக்கிறது. இதற்காக விவசாயிகளிடம் இருந்து எந்தவித கட்டணமும் வாங்காமல் நெல் கொள்முதல் செய்கின்றனா். நெல் மூட்டைகளை கொண்டு வரும் விவசாயிகளுக்கு உதவியாக நெல் மூட்டைகளை ஏற்றி இறக்கும் பணியில் 15க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கான கூலியை நாங்களே, எங்கள் விருப்பம்போல கொடுத்து விடுகிறோம். கொள்முதல் நிலையத்தில், நெல்லை விற்பனை செய்வதற்கு ஆன்லைனில் பதிவு செய்யும் முறையை பின்பற்றுவதில், பல விவசாயிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. அதனால், பதிவு செய்யும் முறையை எளிமையாக்கினால், விவசாயிகளுக்கு மேலும் வசதியாக இருக்கும் என்றனா்.