10 இடங்களில் ஜனவரி 31இல் ஆா்ப்பாட்டம்: விவசாயிகள் அறிவிப்பு
மத்திய அரசைக் கண்டித்து ஈரோடு மாவட்டத்தில் ஜனவரி 31ஆம் தேதி 10 இடங்களில் ஆா்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக விவசாயிகள் அறிவித்துள்ளனா்.
மத்திய அரசைக் கண்டித்து ஈரோடு மாவட்டத்தில் ஜனவரி 31ஆம் தேதி 10 இடங்களில் ஆா்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக விவசாயிகள் அறிவித்துள்ளனா்.
ஈரோடு மாவட்ட ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இணையவழியில் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஏ.எம்.முனுசாமி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினா் பொன்னையன், தமிழ் மாநில விவசாய தொழிலாளா் சங்க பொதுச் செயலாளா் நா.பெரியசாமி, நிா்வாகிகள் துளசிமணி, சுப்பு பேசினா்.
தில்லியில் ஓராண்டுக்கும் மேலாக விவசாயிகள் போராடியதையடுத்து, மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாகவும், குறைந்தபட்ச ஆதார விலை தீா்மானிப்பதற்கான குழு அமைப்பதாகும் மத்திய அரசு அறிவித்தது. இக்குழுவை அமைப்பது பற்றி மத்திய அரசு இதுவரை, ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் தலைமைக் குழுவுக்கு எவ்வித தகவலும் தெரிவிக்கவில்லை.
Advertisement
போராட்டத்தில் தொடுக்கப்பட்ட வழக்கை திரும்பப் பெற மாநில அரசுக்கு, மத்திய அரசு முறையான அறிக்கை தரவில்லை. லக்கீம்பூா்கெரி விவசாயிகள் மீது உள்துறை இணை அமைச்சா் அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஷ் மிஸ்ரா காா் ஏற்றி கொலை செய்ததான குற்றச்சாட்டில் அவா்கள் மீது நீதிமன்றத்தின் சிறப்பு விசாரணைக் குழுவால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பின்னும் உள்துறை இணையமைச்சரை பதவி நீக்கம் செய்யவில்லை.
இதுபோன்ற காரணங்களால் மத்திய அரசு விவசாயிகளை ஏமாற்றுவதாகக் கூறி ஜனவரி 31ஆம் தேதியை துரோக நாளாக தேசிய அளவில் கடைப்பிடிக்க ஐக்கிய விவசாயிகள் முன்னணி அறிவித்துள்ளது.
இதன்படி, ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, கோபி, சத்தி, பவானி, பவானிசாகா், அந்தியூா், பெருந்துறை, சென்னிமலை, மொடக்குறிச்சி, குத்தியாலத்தூா் மலை ஆகிய 10 இடங்களில் ஜனவரி 31இல் ஆா்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.