FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தினமணி கதிர்

நூறு கோடி பேர் பார்த்த காணொலி

'என் வாழ்நாளில் தந்தையை இருபது முறை மட்டுமே பார்த்துள்ளேன்.

Updated On : 19 ஏப்ரல் 2026, 4:16 am IST
பகிர்:

'என் வாழ்நாளில் தந்தையை இருபது முறை மட்டுமே பார்த்துள்ளேன். தந்தை கொல்லப்படுவதற்கு முன்பே என் நினைவில் தொலைந்துபோனவர்... அவ்வளவுதான் எங்களது தந்தை - மகன் உறவு!' என்ற வரிகளைக் கொண்ட சோகப் பாடல் மீண்டும் மீண்டும் வைரல் ஆகிவருகிறது. பாடலின் தலைப்பே 'பாப்பாஉட்டே'.

அதற்கு, 'அப்பா, நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்?'என்று பொருள். 'தந்தையை இனிப் பார்க்க முடியுமா?' என்ற ஏக்கப் பெருமூச்சையும், தந்தை இல்லாததால் ஏற்படும் வலியையும் ஒன்றாகக் குழைத்து, வார்த்தைகளில் பாடல் வழியவிடுகிறது. 'தந்தை இருந்ததற்கான நினைவு இல்லாததால், தன் வாரிசுக்கு தான் ஒரு சிறந்த தந்தையாக இருக்க முடியாமல் போய்விடுமோ?' என்ற ஸ்ட்ரோமேயின் பயமும் வரிகளில் புதைந்துள்ளன.

பிரபல பாடகர் ஸ்ட்ரோமே பாடி, 'ரசீன் கரே' ஆல்பத்தில் இடம்பெற்ற, 'பாப்பாஉட்டே' பிரெஞ்சுப் பாடல் 2013 -இல் வெளியாகி பிரபலம் அடைந்து, பல விருதுகளை வாங்கிக் குவித்தது.

Advertisement

Advertisement

இதுவரை சுமார் 17 பதிப்புகள் வந்த போதிலும், 13 ஆண்டுகளுக்குப் பிறகும், அதே பாடல், 2026 -இல் இன்ஸ்டாகிராம் உட்பட அனைத்து சமூகத்தளங்களைக் கலக்கிக் கொண்டிருக்கிறது. பெரியவர் முதல் சிறு குழந்தைகள் வரை முணுமுணுக்கும் பாடலாக மாறியுள்ளது.

ஸ்ட்ரோமேக்கு பெற்றோர் சூடிய பெயர் பால் வான் ஹேவர். ஸ்ட்ரோமேயின் தந்தை பியர் ருட்டாரே, ருவாண்டா நாட்டில் கட்டடக் கலைஞர். ஸ்ட்ரோமேயின் குழந்தைப் பருவத்தில் தந்தை பெரும்பாலும் வேலை காரணமாக உடனிருக்கவில்லை.

பொதுவாகவே, ஆப்பிரிக்க நாடுகளில் தந்தை இல்லாமல் வளரும் குழந்தைகள் அநேகம். பிழைப்புக்காக ஆப்பிரிக்காவின் மற்ற பகுதிகளுக்கும் கடல் தாண்டி வேறு நாடுகளுக்கும் வேலைக்குச் சென்றுவிடும் தந்தைகள் இருப்பதால், பெரும்பாலான குழந்தைகள் தந்தையின்றியே வளர்கின்றனர். அவர்கள் அனுப்பும் பணம் மட்டுமே வந்து சேரும். அந்தக் குடும்பங்களில் வளர்ந்த, வளரும் குழந்தைகளின் பாசப்பசியின் வெளிப்பாடாக 'பாப்பாஉட்டே' அமைந்துள்ளது.

இந்தப் பாடலின் கருப்பொருள் 1994 -இல் ருவாண்டா இனப்படுகொலையை மையமாகக் கொண்டது. அந்த இனப்படுகொலையில் ஸ்ட்ரோமேவின் தந்தை கொல்லப்பட்டார்.

9 வயது மட்டுமே நிரம்பியிருந்த ஸ்ட்ரோமேவை, அவரது பெல்ஜிய தாயார் மிராண்டா வான் ஹேவர், பிரஸ்சல்ஸில் இதர 4 உடன்பிறப்புகளுடன் வளர்த்து ஆளாக்கியுள்ளார்.

12 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த பாடலில், தந்தையை இழந்த சிறுவன் தந்தையை பொம்மையாக வடிவமைத்து, அதனுடன் நேரம் செலவிட முயற்சிக்கிறான். என்ன முயன்றும், சிறுவனால், பொம்மைத் தந்தையின் வாஞ்சையை, கொஞ்சலைப் பெற முடியவில்லை. தன் வயதிலுள்ள குழந்தைகள் தங்கள் தந்தைகளுடன் பாசப் பிணைப்பைப் பகிர்ந்து கொள்வதைப் பார்த்து உள்ளுக்குள் தளர்ந்து போகிறான்.

விரக்தியின் உச்சத்தில், மகன், தன் தந்தையின் முன்னால் பல்வேறு நடனங்களை ஆடுகிறான். எப்படியாவது தந்தையை புன்னகைக்க வைத்துவிட வேண்டுமென்று பல

வழிகளில் முயல்

கிறான். ஆனால், தோல்வியே கிடைத்தது. வேறு வழியில்லாமல், மகன் பொம்மைத் தந்தையுடன் சோஃபாவில், தன் தந்தையைப் போலவே விறைப்பாக அமர்கிறான். பொம்மைத் தந்தையாக ஸ்ட்ரோமே நடித்துள்ளார்.

'பாப்பாஉட்டே'யின் புதிய பதிப்பில், எலக்ட்ரானிக் பாப் பீட்ஸ், ஆஃப்ரோபீட் ரிதம்கள், ஆன்மாவைத் தொடும் கோரஸ் அடுக்குகள் மற்றும் இதமான குரல் பாடலை வைரல் ஆக்கியுள்ளன. இப்போதைக்கு 2026 ஆண்டின் மிகவும் பிரபலமான பாடல் 'பாப்பாஉட்டே' தான்!

ஒரிஜினல் 'பாப்பாஉட்டே' பாடலை யூ டியூப் தளத்தில் 100 கோடிகளுக்கும் அதிகமானபேர் பார்த்துள்ளனர். ஸ்ட்ரோமே, ஆடை வடிவமைப்பாளரான கோரலி பார்பியரை மணந்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகன். வரும் நாட்களிலும் பெரிதாகப் பேசப்படும் பாடலாக 'பாப்பாஉட்டே' அமையும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments