கிருஷ்ணா! புராண, இதிகாசங்களிலிருந்து விரிவான ஒரு தொகுப்பு!
கிருஷ்ண ஜெயந்தி நாளில் கிருஷ்ணரைப் பற்றிப் புராணங்களில் இடம் பெற்றுள்ள நமக்குத் தெரிந்த, தெரியாத எண்ணற்ற தகவல்களைப் பகிர்கிறார் ஆன்மிக ஆய்வாளரான எஸ். பாலசுப்ரமணியன்...
- எஸ். பாலசுப்ரமணியன்
[அமெரிக்காவில் நியு யார்க் நகரில் தன்னுடைய மகனுடன் வசிக்கிறார் 88 வயதான எஸ். பாலசுப்ரமணியன். தமிழ்நாட்டில் தனியார் நிறுவனமொன்றில் வேதியியல் பொறியாளராகப் பணியாற்றி இணை மேலாண் இயக்குநராக ஓய்வு பெற்றவர். ஓய்வுக்குப் பின் ஆன்மிகத்தில் ஏற்பட்ட ஈடுபாடு காரணமாக புராண, இதிகாசங்களை ஆழமாகப் படிக்கத் தொடங்கினார். தான் படித்தறிந்தவற்றை மற்றவர்களும் அறியலாமே என புராணங்களில் வரும் பெயர்கள், நிகழ்வுகள் போன்றவற்றை அகர வரிசையில் தொகுக்கத் தொடங்கினார். புராண களஞ்சியம் / புராண குவியல் என்ற பெயரில் ஏறத்தாழ 1,500 பக்கங்கள்! நூலாக்குவதற்கான முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. விரைவில் இவர் ஆங்கிலத்தில் எழுதிய சயின்ஸ் அன்ட் இந்தியன் ஸ்க்ரிப்சர்ஸ் (Science and Indian Scriptures) நூல் வெளிவரவுள்ளது.
இன்று கிருஷ்ண ஜெயந்தி, ஜன்மாஷ்டமி, கோகுலாஷ்டமி – மாபெரும் சூத்திரதாரியான – பகவத் கீதையை அருளிய கிருஷ்ண பகவான் அவதரித்த நாள். இந்தத் திருநாளில் எஸ். பாலசுப்ரமணியனுடைய தொகுப்பிலிருந்து கிருஷ்ணனைப் பற்றிய குறிப்புகள் மட்டும் தினமணி இணையதள வாசகர்களுக்கு முன்னோட்டமாக இங்கே].
Advertisement
Advertisement
*
கிருஷ்ணன்
விஷ்ணுவின் அவதாரம். 28வது த்வாபர யுகத்தில் எடுத்தது. எல்லோருக்கும் கிருஷ்ணனின் லீலைகளை அறிவர். ஆகையால் இங்கே சிற்சில அறிய நிகழ்ச்சிகளே இடம் பெறும்.
யாதவகுலம்: தந்தை--வஸுதேவர்; தாய்--தேவகி; வளர்ப்புத் தந்தை - நந்தகோபர்; வளர்ப்புத் தாய் - யசோதை; வம்சம் – கர்த்தவீர்யார்ச்சுனன் – ஜயத்வஜன் - தால ஜங்கன் – விதிஹோத்ரன் – அநந்த – துர்ஜய – யுதாஜித் – சினி – ஸத்யக – ஸாத்யகி – ஜய – கினி – அநாமித்ர – ப்ரஷ்னி – சித்ரதர – விதுரத – சூரன் – சினிபோஜன் – ஹ்ருதிகன் – சூரஸேனன் – வஸுதேவன் – கிருஷ்ணன். வஸுதேவருடன் கூடப் பிறந்தவர்கள் - தேவபாஹன், தேவஸ்ரவஸ், அநகன், ச்ருஞ்சயன், காகாநிகன், ஸ்யாமகன், வத்ஸன, காவூகன், வஸு; வஸுதேவனின் தந்தை மதுராபுரியை ஆண்டு வந்தார். சூரஸேனன் இறந்த பிறகு, வஸுதேவர் பசுக்களைக் கவனிக்க உக்ரஸேனன் அரசனானான். உக்ரஸேனனின் தம்பி (தேவகனின்) பேத்தியே, தேவகியாவாள். இவள் வஸுதேவரை மணந்தாள். இவரின் மற்றொரு மனைவி ரோஹிணி. வஸுதேவரும் தேவகியும், கஸ்யபர் அதிதியின் மறு பிறப்பே. அவரின் மற்றொரு மனைவி சுரஸாவே ரோஹிணி. ப்ரம்மனின் இதயத்திலிருந்து தர்ம என்ற ப்ரஜாபதி வர, அவர் தக்ஷனின் 10 மகள்களை மணந்தார். அவர்களுக்கு நர,நாராயண, ஹரி, க்ருஸ்ன என நான்கு பிள்ளைகள். ஹரி, க்ருஸ்ன பெரிய யோகிகளாயினர். நர நாராயணர்கள் தவமிருக்க அதை இந்திரன் தடுக்க, அப்சரஸ் ஸ்த்ரீகளை அனுப்ப, நாராயணன் சபிக்க இருக்க, நர தடுத்து, அவர்களிடம் "இப்போது என் தவத்தை பூர்த்தி செய்தால் 28-வது சதுர் யுகத்தில் நீங்கள் யாவரும் மனைவிகளாகலாம்" என்றார். ஆக நர நாராயணர்களே கிருஷ்ணன், அர்ச்சுனனாக பிறந்தனர்.
தேவாசுர யுத்தத்தின்போது சுக்ராச்சாரியார் ஆயுதங்கள் பெற சிவனிடம் செல்ல, அச்சமயம் தேவர்கள் முனிவரின் தாயை (காவ்யமாதா), துன்புறுத்த அவள் தன் தவ வலிமையால் எல்லோரையும் தூங்க வைத்தாள். இந்திரன் இதை விஷ்ணுவிடம் கூற அவர் அவசரத்தில் தன் சக்கரம் கொண்டு காவ்யமாதாவின் தலையை சீவினார். ப்ருகு முனி வெகுண்டு விஷ்ணுவைப் பல முறை மனிதனாகப் பிறப்பாய் என சபித்தார். இதனால்தான் கிருஷ்ணாவதாரம் (தேவி பாக--5).
கம்சன் தேவகியையும், வசுதேவரையும் தனது தேரில் அழைத்து செல்லும்போது, ஒரு அசிரீரி: இவர்களின் எட்டாவது குழந்தையால் நீ இறப்பாய் என்றது; இதை மறந்திருந்த கம்சனுக்கு நாரதரே ஞாபகமூட்டினார்; ஆக, கம்சன் கோபத்தால், வஸுதேவரின் முதல் குழந்தை கீர்த்திமான் அடித்து கொல்லப்பட, வரிசையாக ஆறு குழந்தைகளைக் கொன்றான். மாயாதேவியிடம் கிருஷ்ணன், ஏழாவது குழந்தையாகப் பிறக்க இருந்த பலராமரை, ரோஹிணியின் கருவில் மாற்ற சொல்லி, அவளையும் யசோதையின் வயிற்றில் வளருமாறு ஆணையிடுகிறார். ஆக, ஏழாவது குழந்தை கருவிலே அழிந்ததாக கணிப்பு. கம்சன் எட்டாவது குழந்தையான மாயா தேவியை அடிக்க அவள் கை நழுவி மேலே பறந்து, கிருஷ்ணன் கோகுலத்தில் வளர்வதைக் கூறுகிறாள்.
கஸ்யபர், அதிதியே, சூடாபஸ், வ்ருஷ்ணியாக பிறந்து 12,000 ஆண்டுகள் தவமிருந்தனர். அவர்களுக்கு வாமனனாக பிறந்தார் விஷ்ணு. இதை கிருஷ்ணரே வஸுதேவருக்கு பிறந்ததும் சங்கு சக்கர கதாபாணியாய் காட்சியளித்து கூறினார்.
இந்த ஒரு அவதாரத்தில் தான், தான் யார் என்பதை பல முறை கூறியுள்ளார். கிருஷ்ணாவதாரம் முன்பு தேவர்களிடம் தன் தலையிலிருந்து ஒரு கறுப்பு, ஒரு வெள்ளை முடியை எடுத்து, கறுப்பு நான், வெள்ளை பலராமன் எனக் கூறி இந்த அவதாரம் எடுத்தார். பலராமர் ரோஹிணியின் வயிற்றில் வளர்வான் எனவும் தேவர்களிடம் கூறியுள்ளார்.
பால லீலைகள்;;; 1. பூதனை கோபிகையர் போல் வந்து பால் கொடுக்க இவர் அவளை உறிஞ்சி கொன்றார். 2. கம்சனின் ஆள் சகடாசுரன் சக்கரம் போல் வர அவனை உதைத்துக் கொன்றார். 3. தாரகாசுரனின் மகன் த்ருண வ்ருத்தாசுரன் கிருஷ்ணனை காற்று உருவில் வந்து தூக்க, அவர் அவன் மேல் உட்கார, பளு தாங்காமல் கீழே விழ அவனின் குரல்வளையைப் பிடித்து கொன்றார். பிறகு குழந்தையை போல் யசோதையிடம் சென்றார். 4. கோகுலத்திற்கு வந்த கர்க முனிவரே இவர்களுக்குப் பெயர் சூட்டினார். 5. யசோதைக்கு தன் வாயில் மூவுலகையும் காண்பித்தார். 6. யசோதை இவனை உரலில் கட்டிப் போட, அதை இவன் இழுத்து வர, வழியிலிருந்த இரண்டு மரங்கள் பிளவுபட, அதிலிருந்து இரண்டு தேவர்கள் (வைஸ்ரவனனின் மகன்கள் - நளகூபரன், மணிக்ரீவன்) வான் நோக்கி மறைந்தனர். நாரதரின் சாபத்தால் மரங்களாயினர். 7. கம்சனின் ஆள் வடாசுரன் பசு ரூபத்தில் மந்தையில் வர, அதை அறிந்த கிருஷ்ணன், பலராமர் அவனைத் தூக்கி எறிந்து கொன்றனர். 8. பூதனையின் தம்பி பகன், பறவையின் ரூபத்தில் வர கிருஷ்ணர் வாயினுள் புகுந்து வயிற்றைப் பிளந்தார். 9. பூதனையின் மற்றொரு தம்பி ஆஹாசுரன் பாம்பு ரூபத்தில் வர, அவனையும், எல்லோரும் வயிற்றினுள் புகுந்து வெளிவர அவன் இறந்தான். 10. ப்ரம்மா இவரைச் சோதிக்க பசுக்களையும், கோபர்களையும் மறைக்க, இதை அறிந்த கிருஷ்ணன் தன் தெய்விகத் தன்மையால், அதே போல் அவர்களை உருவாக்க, ஒரு வருடம் சென்று ப்ரம்மா வந்து பார்க்க, ஆச்சரியப்பட்டார். அச்சமயம் கிருஷ்ணனுடன், கோபர்கள் யாவரும் விஷ்ணு ரூபத்தோடு காட்சியளிக்க, அதோடு மற்றொரு ப்ரம்மா, ப்ரம்ம லோகம், கிருஷ்ணன் காண்பிக்க, ப்ரம்மா நடுங்கிக் காலில் வீழ்ந்து மன்னிப்பு கேட்டார். 11. யமுனை நதிக்கரையிலுள்ள கதளி வனத்தில் தேனகாசுரனை கொன்றார். 12. யமுனையில் வாழ்ந்த காளியன் என்ற பாம்பு கோபர்களை, பசுக்களை தன் விஷத்தால் கொல்ல, கிருஷ்ணன் உடனே அவனின் தலையில் நர்த்தனமாட அவன் கக்கி எல்லோரும் வெளி வர, பிறகு பாம்புகள் அங்கிருந்து ரமநக தீவிற்கு ஓடினர். 13. காளியன் இவருக்கு ஒரு ரத்தினம் பரிசளித்தான். மூஞ்சா காட்டில் ஒரு முறை தீ வர, கிருஷ்ணர் தீயை விழுங்கினார்.14. கோபர்களுடன் விளையாடும் போது, ப்ரலம்பன் என்ற அசுரன் கோபர் போல் வர, அவனை பலராமர் தன் முஷ்டியால் அடித்துக் கொன்றார். 15. யமுனை கரையில், விளையாடும் போது பசி எடுக்க, இவர்களுக்கு அந்தணர்களின் மனைவியர் உணவு அளிக்க இவர்கள் வாழ்த்தினர். 16. மழை கடவுளாக கோபர்கள், இது நாள் வரை இந்திரனை வணங்கி வந்தனர். கிருஷ்ணன் அவர்களை கோவர்த்தன மலையை வணங்கச் சொல்ல இந்திரன் கோபித்து புயல் மழை வரவழைக்க, கிருஷ்ணன் கோவர்த்தன மலையைத் தூக்கி அவர்களை காப்பாற்ற, இந்திரன் அவமானப்பட்டு மன்னிப்புக் கேட்க, இவரை எல்லோரும் கோவிந்தன் என அழைத்தனர்.17. கோபியர்களின் துணியை மறைக்க அவர்கள் தங்கள் தவறை உணர்ந்து கேட்க, இவன் திருப்பி கொடுத்தான். 18. வருணன் நந்த கோபரைக் கடத்த பலராமனும் கிருஷ்ணனும் சென்று, மீட்டனர். வருணன் கிருஷ்ணனைப் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். 19.கோபியர்கள் (மணமானவர்கள், மணமாகாதவர்கள்) கிருஷ்ணனின் குழலோசை கேட்டு மயங்கி, வீடு செல்லாமலிருக்க அவன், அவர்களை சுய நினைவிற்கு கொண்டு வர, தான் மறைய, அவர்கள் அவனை கோகுலம் முழுவதும் கிருஷ்ணா, கிருஷ்ணா என பக்தி மேலிட்டுத் தேட, அவன் காட்சி கொடுத்து பக்தி யோகத்தை விளக்கினான். 20. கோபர்கள் மஹேஸ்வர பூஜை செய்ய, காட்டிலிருந்த மலைப் பாம்பு நந்த கோபனை விழுங்க, கிருஷ்ணன் அவரை மீட்டான். கிருஷ்ணன் உதைத்ததில் அந்தப் பாம்பு தன் சுய ரூபம் பெற்று தேவனாக மாறியது. சுதர்ஸனன் என பெயர் கொண்ட இவன் ஆங்கிரஸின் சாபத்தால் பாம்பானான். 21. கம்சனின் ஆணைபடி அரிஸ்டாசுரன் (வ்ரஜாசுரன்) எருது வடிவில் வர, கிருஷ்ணன் அதனுடன் போராடி வென்றார். 22. குதிரை வடிவத்தில் வந்த கேஸி என்ற அசுரனையும் அவன் வாய்க்குள் கையை விட்டுக் கொன்றார். 23. மாயாசுரனின் மகன் வ்யோமாசுரன் ஆடு ரூபத்தில் வர அவனை குகையினுள் தள்ளிக் கொன்றார். இவை யாவும் (பாகவதம் --10) லிருந்து எடுத்தது.
கம்சன், அக்ரூரர் மூலமாக 14 நாள் நடக்கும் தனுர் யாகத்திற்கு கிருஷ்ணனையும் பலராமரையும் வரச் சொல்லி தேர் அனுப்பினான். அக்ரூரர் யமுனையில் குளிக்கும்போது கிருஷ்ணன் தனது விஸ்வரூபத்தைக் காட்ட, அவர் அவர்களிடம் கம்சனின் கெட்ட எண்ணத்தை கூறினார். வரும் வழியில் ஒரு சலவைக்காரன் இவர்களைக் கிண்டலடிக்க, இவர்கள் அவனைத் துவைத்துப் போட்டனர். ஆனால் அதேசமயம் ஒரு தையற்காரன் துணிகள் கொடுத்து இவர்களுக்கு உதவ, அவனை வாழ்த்தினர். பிறகு ஒரு முதியவள், "த்ரிவக்ர" என்பவள், கம்சனுக்காக வைத்திருந்த சந்தனத்தை இவர்களுக்காக்க் கொடுக்க, கிருஷ்ணன் அவளின் கூனலை நிமித்தினார். பிறகு யாக சாலையின் வாயிலில் இருந்த பெரிய வில்லை இடது கையால் ஒடிக்க, அதன் துண்டுகளைக் கொண்டு ஸேனையைத் துரத்தினான். உறக்கம் வரவில்லை. காலையில் சபைக்கு வரும் போது, கம்சன் குவலய பீடம் என்ற யானையை அனுப்ப, அதைத் தள்ளிக் கொன்று அதன் தந்தத்தை பலராமருக்கு அளித்தான். மல்யுத்த வீரர்கள் சானுரன், முஷ்டிகன், கூடன், சலன், கோசலன், இவர்களை எதிர்க்க அவர்களை எல்லாம் வென்றான். மற்ற வீரர்கள் இதைக் கண்டு காட்டுப் பக்கம் ஓட, கம்சன் பெரும் சப்தத்துடன் களத்தில் இறங்க, ஒரே அடியில் அவனைக் கிருஷ்ணன் கொன்றார். கம்சனின் எட்டு சகோதரர்களை பலராமர் கொன்றார். பிறகு ஈமக் கடன்களை செய்துவிட்டு, தந்தை வஸுதேவர், உக்ரஸேனர், தேவகியை சிறையிலிருந்து மீட்டனர். உக்ரஸேனர் அரசரானார். வஸுதேவர் கர்க முனியின் ஆலோசனைப்படி இருவரையும் சாந்திபனி முனிவரிடம் பாடம் பயில அனுப்பி வைத்தார். அங்கே குசேலர் நண்பரானார். ப்ராபாச தீர்த்தத்தில் மூழ்கிய தன் மகனை, மீட்டுத் தரும்படி குரு இவர்களைக் கேட்க கிருஷ்ணன், வருணனிடம் சென்றான். வருணன் அவர்களிடம் பாஞ்சஜன்யன் என்ற அசுரன் சங்கு வடிவத்தில் வந்து, அச்சிறுவனைக் கொன்றான் என்றான். உடனே, கடலில் மூழ்கி அசுரனைக் கொல்ல, அவனை ஊதினர். சிறுவன் கிடைக்கவில்லை. பிறகு யமனிடம் சென்று வாதாடி அவனை மீட்டுக் குருவிடம் சேர்த்தனர். பிறகு உத்தவரை அனுப்பி கோகுலத்தில் நடப்பதை அறிந்தார். இதன் நடுவில் பாண்டு இறக்க, திருதராஷ்டிரன் அரசு பீடமேறினான். அக்ரூரரை அனுப்பி அங்குள்ள விஷயத்தை அறிந்தான். கம்சனின் இரு மனைவிகள் (அஸ்தி, ப்ராப்தி) ஜராசந்தனின் மகள்கள், அவர்கள் விதவையானதைக் காண சகிக்காத அவன் பல முறை பாணாசுரன் உதவி கொண்டு போரிட்டு கிருஷ்ணனிடம் தோற்றான். அடிக்கடி போரிட்டதால் யாதவ அரசின் நிதி நிலைமை மோசமுற, இவர்கள் இருவரும் கோமந்த மலையிலிருந்து ரத்தினங்கள் எடுத்து வரச் சென்றனர். அங்கே பரசுராமனைப் பார்க்க, அவர் மலையின் கீழ் உள்ள அரசனைக் கொன்றால் நிரம்ப செல்வம் கிடைக்கும் என கூற. அதன்படி கரவீர தேச சென்று ஸ்ருகால வாஸுதேவனைக் கொன்றனர். அங்கிருந்து ப்ரவசனகிரியை அடைய, அங்கே கருடன் பாணாசுரன் திருடிய கிரீடத்தை கிருஷ்ணனிடம் கொடுத்தார். பிறகு இருவரும் மதுராபுரி திரும்பினர். யாதவ படை மிகவும் க்ஷிணம் அடைய, இவர்கள் அவர்களை விட்டு சென்றனர். அவர்களை துரத்த ஜராசந்தன் ஒரு ஏவுகணை விட, அது இவர்களின் பின்னே விழுந்து நொறுங்கியது. கிருஷ்ணனுக்காக விஸ்வகர்மா, துவாரகையில் அழகிய நகரத்தை உருவாக்கினான். அதன் பெயர் குசஸ்தலை. இதன் நடுவில் சிவனின் அருள் பெற்று, அரசன் காலயவனன், மதுராபுரியை வெல்ல நினைத்தான். அதற்கு முன்பே இவர்கள் துவாரகையிலிருந்தனர். மாந்தாத்தாவின் மகன் முசுகுந்தன் இந்திரலோகம் சென்று அசுரர்களை வெல்ல, மகிழ்ந்த இந்திரன் அவனுக்கு நல்ல குகையை உறங்குவதற்காக காட்டினான். அத்தோடு யார் எழுப்பினாலும் தன் பார்வை பட்டவுடன் அவர்கள் எரிந்து சாம்பலாக வேண்டும் எனவும் முசுகுந்தன் வரம் பெற்றான். அவ்வாறே காலயவனன், கிருஷ்ணனனுடன் போரிடும்போது கிருஷ்ணன் பயந்தது போல் நடுங்கி, அந்த குகையினுள் சென்று மறைந்தார். அரசன் முசுகுந்தனைத் தவறுதலாக எழுப்ப, அவரின் பார்வை பட்டதும் சாம்பலானான். பிறகு கிருஷ்ணன் அங்கே வர அவரைப் பார்த்த முசுகுந்தன் மிகவும் மகிழ, அவரை பத்ரிகாஸ்ரமம் சென்று தவமிருக்க சொன்னான்.
பலராம, கிருஷ்ணனின் திருமணங்கள் –
1. பலராமர் குசஸ்தலை அரசன் ஆகர்த்தனின் மகளை மணந்தான்.
2. விதர்ப்ப தேசத்து அரசன் பீஷ்மனுக்கு ஐந்து மகன்கள், ஒரு பெண். மூத்த மகன் ருக்மி; மகளின் பெயர் ருக்மிணி;; ருக்மிணி கிருஷ்ணன் மேல் தீராக் காதல் கொள்ள, ருக்மியோ அவளை சிசுபாலனுக்கு கொடுக்க நினைத்து, நிச்சயமும் செய்தான். உடனே, அவள் ஒரு அந்தணன் மூலம் கிருஷ்ணனுக்கு சொல்ல, பலராமர், கிருஷ்ணர் இருவரும் குந்தினபுரி வந்து, ருக்மிணியை அபகரித்து சென்றனர். துரத்தி வந்த படைகளை வென்றனர். ருக்மிணிக்கு பிறந்தவன் ப்ரத்யும்னன் (முதல் காதல் கடிதம் ருக்மிணியால்தான் எழுதப்பட்டது. அவள் அதை இப்படித் தான் ஆரம்பித்தாள் — श्रुथ्वा गुनानु पुवनसुन्ध्ररा.....
3. யாதவ அரசன் ஸத்ராஜித்தின் தம்பி ப்ரஸேனன் சூர்யன் அளித்த ஸ்யமந்தக ரத்தினத்தை அணிந்து வேட்டையாடச் செல்ல, ஒரு சிங்கம் அவனை அடித்து அந்த ரத்தினத்தை எடுக்க, அதைப் பார்த்த ஜாம்பவான் சிங்கத்தைக் கொன்று ரத்தினத்தை எடுத்து சென்றான். கிருஷ்ணன்தான் எடுத்தார் என வதந்தி பரவ, கிருஷ்ணன் ஜாம்பவான் வாழும் குகையுனுள் நுழைந்து ஜாம்பவானை வென்று ரத்தினத்தை அரசனிடம் கொடுக்க, ஜாம்பவான் கிருஷ்ணன் யார் என்பதை உணர்ந்து தன் மகள் ஜாம்பவதியைக் கொடுத்தான்.
4. அந்த ரத்தினத்தைப் பெற்ற அரசனும் தன் மகள் ஸத்யபாமாவை கிருஷ்ணனுக்கு மணம் முடித்தான்.
5. கிருஷ்ணன் பாண்டவர்கள் அரக்கு மாளிகையில் இறந்து விட்டனர் என எண்ணி அலையும்போது, அவர்கள் காண்டவப்ரஸ்தத்தில் இருக்கின்றனர் என்ற நற்செய்தி கிடைக்க, பிறகு அங்கே சென்று அர்ச்சுனனுடன் சேர்ந்து இந்திரனுடன் போரிட்டு மயனைக் காப்பாற்றினார்கள். அதனால் மயன் இந்திரப்ரஸ்தம் கட்டி கொடுத்தான். ஒரு நாள் அர்ச்சுனனும் இவரும் காளிந்தி நதிக் கரையில் சுற்றி வர அங்கே ஒரு பெண்ணைக் கண்டனர். அவள், நான்தான் காளிந்தி, தங்களை மணக்க விரும்புகிறேன் என சொல்ல கிருஷ்ணே அவளை மணந்தார்.
6. வஸுதேவனின் தங்கை ராஜாதிதேவி, அவந்தி நாட்டு மன்னனை மணந்தாள். அவர்களுக்கு விந்த, அவிந்த என இரண்டு மகன்களும் மித்ரவிந்தா என்ற பெண்ணும் பிறந்தனர். மித்ரவிந்தாவின் சுயம்வரம் சென்று கிருஷ்ணர் அவளை அபகரித்து மணந்தார்.
7. கோசல அரசன் நக்னஜித்திடம் ஏழு எருதுகள் இருந்தன. அதை வெல்பவனுக்கே என் மகள் என கூற கிருஷ்ணன் ஏழு உருவங்கள் எடுத்து, அவற்றை அடக்கி ஸத்யாவை மணந்தான்.
8.வஸுதேவரின் தங்கை (ஸ்ருதகீர்த்தி)யின் மகள் பத்ராவை மணந்தார்.
9. மாத்ர தேசத்து இளவரசி லக்ஷணா சுயம்வரத்தில் கிருஷ்ணனை தேர்ந்தெடுத்தாள்.
10. 16,000 பெண்களை (நரகாசுரனின் மகள்கள்) விடுவித்து, மணந்து அவர்கள் ஒவ்வொருவருக்கும் அரண்மனை கட்டிக் கொடுத்தான். இந்த கதை புராணங்களில் இல்லை.
கண்ட ,கரண என்ற அசுரர்களுக்கு பத்ரிகாஸ்ரமத்தில் மோக்ஷம் அளித்தார். முராசுரனை வென்றார். நரகாசுரனை வென்று அவனிடமிருந்து இந்திரனின் குடை, அதிதியின் காதணியை மீட்டு வந்தார். இந்திர லோகம் சென்று இந்திரனை வென்று பாரிஜாத மலர்க் கொடி கொண்டு வந்து ஸத்யபாமாவின் தோட்டத்தில் வைத்தார்.
கிருஷ்ணனின் குழந்தைகள் - 8 மனைவிகளுக்கு 10 மகன்கள் வீதம், 80 குழந்தைகள் பிறந்தன. சில தெரிந்த பெயர்கள் ருக்மிணி, ப்ரத்யும்னன், சாருதேக்ஷனன், சுதேக்ஷனன், சாருதேஹன், சுசாரு, சாருகுப்தன், பத்ரசாரு, சாருசந்திரன், அதிசாரு, சாரு; மகள் - சாருமதி; இவள் க்ருதவர்மனின் மகனை மணந்தாள். ஜாம்பவதி, சாம்ப, சுமித்ரன்; ஸத்யபாமா; பானு, சுபானு, ஸ்வரபானு, ப்ரபானு, பானுமான், சந்திரபானு, ப்ரஹத்பானு, ஹவிர்பானு, ஸ்ரீபானு, ப்ரதிபனு; காளிந்தி; ஸ்ருதா, மித்ரவிந்தா, வ்ரகஹம்ஸன்; ஸத்ய; பானுசந்திரன், பத்ரா, ஸங்க்ராமசித்தன், லக்ஷ்மணா; ப்ரஹ்ஹோசன்.
பேரன்; அநிருத்தன் (ப்ரத்யும்னன் - ருக்மாவதி). இவன் உஷாவை மணந்தான். தன்னிடம் பணமில்லை, செல்வமில்லை எனக் கூறி, ருக்மிணியை வேறொருவனை மணந்து கொள் எனக் கூற அவள் மயங்கி விழுந்தாள். இது ஒரு நாடகமே. கிருஷ்ணன் பாணாசுரனுடன் போரிட்டான். பௌண்டிரகனை கொன்றான். நிர்கனுக்கு மோக்ஷம் கொடுத்தான். பாஞ்சாலியின் சுயம்வரத்தின் போது ஆசிர்வதித்தார். தன் தங்கை சுபத்ரையை அர்ச்சுனனுக்கு மணமுடித்தார். நாரதர், கிருஷ்ணன் எவ்வாறு 16008 மனைவிகளுடன் வாழ்கிறான் என சோதிக்க எண்ண, ஒவ்வொரு வீடாக செல்ல அங்கே எல்லா இடத்திலும் கிருஷ்ணனை காண அவர் ஆச்சரியப்பட்டார். ஜராசந்தனை அந்தணர் வேடத்தில் சென்று வென்று அவனின் மகனை (ஸகதேவன்) அரசனாக்கினார். பிறகு கிருஷ்ணன் பாண்டவர்களுடன் வாழ்ந்த நாட்கள் தான் அதிகம்.
பிறகு பாரத யுத்தம், கீதோபதேசம் என பற்பல நிகழ்வுகள். இவை யாவும் பாரதத்தில் அழகாக விவரிக்கப்பட்டுள்ளன. பாரதத்தில் வரும் எல்லா கதாபாத்திரங்களும் அவரவர்களின் பெயர் வரும்போது, வர்ணிக்கபட்டுள்ளது. பாரத யுத்தம் முடிந்த பிறகு கிருஷ்ணன், சுபத்ரையுடனும் ஸாத்கியுடனும் துவாரகை சென்றார். உத்தங்கர் மஹாமுனியிடம் நடந்ததை கூறுகிறார். ரைவத மலையில் நடந்த யாதவர்களின் திருவிழாவில் கலந்து கொள்கிறார். வஸுதேவரிடம் பராத யுத்தம் பற்றி கூறினார். அபிமன்யுவின் அந்திம க்ரியைகளை செய்தார். பிறகு ஹம்ச தீபகர்களை கொன்றார். பரிக்ஷித்து பிறக்கும்போது, அஸ்வத்தாமாவின் அம்பினால் மரிக்க, குந்தியின் வேண்டுதலால் அவனை உயிர்ப்பித்தார். (அஸ்--66). கிருஷ்ணனின் கடைசி நாட்கள்:- பாரதயுத்தம் முடிந்ததும் கௌரவர்கள் எல்லோரும் அழிய, காந்தாரி மிகவும் வருத்தத்துடன் கிருஷ்ணனிடம் "எல்லாம் தெரிந்த நீயே எல்லோரையும் அழித்தாய். இன்றிலிருந்து 36 வருடங்களில் நீயும் உன் உறவினர்களும் குலமும் அழிந்து போகும். நீயும் ஒரு வேடனால் கொல்லப்படுவாய்" என சபித்தாள். அவ்வாறே 36 ஆண்டுகள் கழிந்து முடிந்தன. ஒருமுறை விஸ்வாமித்ரர், கண்வர், நாரதர் துவாரகை செல்ல, கோபர்கள் சாம்பா என்பனின் வயிற்றில் துணியை கட்டி கர்ப்பவதி போல் வேடமிட்டு முனிவர்களிடம் "என்ன பிறக்கும்" என வினவ, அவர்கள் ஒரு இரும்பு துண்டு பிறக்கும் என்றனர். அதோடு அது உங்கள் குலத்தையும் அழிக்கும் என்றனர். அவர்கள் அதைப் பொடிப் பொடியாக்கி கடலில் போட்டனர். யாதவர்கள் குடிப்பது, பெண்களிடம் கெட்ட முறையில் பழகுவது போன்ற செயல்களில் ஈடுபட்டனர். கிருஷ்ணன் குடியை நிறுத்த சட்டம் போட்டும் அவர்கள் திருட்டுத்தனமாக குடித்தனர். கடலில் போட்ட இரும்பு துகள்கள் கூரான புற்களாக முளைத்தன. கிருஷ்ணன் அவர்களை ஆவேசத்துடன் அடித்து பலரை கொன்றார். குடிபோதையில் அவர்கள் ஒருவரையொருவர் புற்களால் அடித்து எல்லோரும் மாண்டனர். ஆக, யாதவ குலம் அழிந்தது. பலராமன் தனியாகச் சென்று விட, கிருஷ்ணன் தாருகனை அனுப்பி, அர்ச்சுனனிடம் நடந்தவற்றைச் சொல்ல சொன்னான். பிறகு பெண்களை சமாதானம் செய்தான். வஸுதேவரிடம் விடை பெற்றான். அப்போது சற்றுத் தொலைவில் பலராமரை (ஆன்மாவை) பாம்புகள் பாதாளம் எடுத்துச் செல்வதை பார்த்தார்.
பிறகு காட்டில் ஒன்றும் புரியாமல் அலைந்தார். பிறகு களைப்பாற மரத்தில் அமர, ஜரா என்ற வேடன் கிருஷ்ணனின் காலை கலைமான் என எண்ணி அம்பெய்ய, அவர் அடிபட்டு இறந்தார். பிறகு விஷ்ணுவுடன் ஐக்கியமானார்.
ஒரு முறை துர்வாசர் ருக்மிணி கொடுத்த உணவை உண்டு மீதியை கிருஷ்ணன் மேல் தடவச் சொல்ல, அவள் காலைத் தவிர எல்லா இடமும் தடவினாள். துருவாசர் ருக்மிணியை காட்டில் விட்டுவிட்டு, கிருஷ்ணனிடம் "கிருஷ்ணா, உன் சேவையை, பரிவைப் பாராட்டுகிறேன். ருக்மிணி உத்தமப் பெண். அவளுக்கு மூப்பே கிடையாது. உன் உடம்பில் உணவு தடவிய இடங்களில் அம்பு பட்டால் ஒன்றும் ஆகாது" என்றார். ஆனால், காலில் பட்டுதான் கிருஷ்ணன் இறந்தார். கிருஷ்ணனின் ஈம க்ரியைகளை அர்ச்சுனன் செய்தான் (மௌசால--7). கிருஷ்ணனின் மனைவிகள் தீக்குளித்தனர். மற்ற மனைவிகளை அழைத்துக் கொண்டு அர்ச்சுனன் காட்டு வழிச் செல்ல, ஆதிவாசிகள் அவர்களை துன்புறுத்த, எல்லோரும் சரஸ்வதி நதியில் வீழ்ந்து இறந்தனர் (ஸ்வர்க்கரோஹண--6).
ஒரு இடைச்செருகல் - பெரும் மதிப்பிற்குரிய கே.எம். முன்ஷி தனது பவன் ஜர்னலில் பலராமன் மற்ற கோபர்களைப் பற்றி இவ்வாறு எழுதியுள்ளார் - சுனாமி வருவதை அறிந்து கிருஷ்ணன் எல்லோரையும் எச்சரிக்க, பலராமரும் மற்றவர்களும் பல படகுகளில் வெளியேற அவர்கள் அரேபிய நாட்டில் தரை தட்டினர். அங்கேயே வாழ்ந்தனர் - அவர்கள் யாவரும் சிவபக்தர்களானதால் சந்திரப்ரபை, சூலம் வைத்து பூஜித்து வாழ்ந்தார்கள்.
கட்டுரையாளர் – ஆன்மிக ஆய்வாளர் - விற்பன்னர், வேதியியல் பொறியாளர் (ஓய்வு).
A comprehensive collection from the Puranas and Itihasas about krishna
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.