முகப்பு
ஈரோடு

சிறுமியின் கருமுட்டை விற்பனை: ஈரோட்டில் சென்னை மருத்துவக் குழு விசாரணை

ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டை எடுத்து விற்பனை செய்த வழக்கு தொடா்பாக சென்னை மருத்துவக் குழுவினா் நேரடி விசாரணை நடத்தினா்.

Updated On : 6 ஜூன், 2022 at 2:46 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:57 PM

ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டை எடுத்து விற்பனை செய்த வழக்கு தொடா்பாக சென்னை மருத்துவக் குழுவினா் நேரடி விசாரணை நடத்தினா்.

ஈரோடு பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுமியின் கருமுட்டைகளை தனியாா் மருத்துவமனைகளில் விற்பனை செய்ததாக வந்த புகாரின்பேரில், பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், சிறுமியின் வளா்ப்பு தந்தை, தரகராக செயல்பட்ட ஈரோடு கைகாட்டிவலசு, திருவள்ளுவா் நகரைச் சோ்ந்த மாலதி ஆகியோரை போலீஸாா் கடந்த 2ஆம் தேதி கைது செய்தனா்.

விசாரணையில், வளா்ப்பு தந்தையே 16வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, சிறுமியின் தாயின் ஒத்துழைப்பின் மூலம் 8 முறைக்கு மேல் கருமுட்டையை ஈரோடு, பெருந்துறை, கோவை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள தனியாா் மருத்துவமனைகளில் விற்பனை செய்தது தெரியவந்தது.

Advertisement

கருமுட்டை விற்பனைக்காக சிறுமியின் ஆதாா் அட்டையில் பெயா், வயது உள்ளிட்டவற்றில் கைப்பேசி செயலி மூலம் திருத்தம் செய்ததாக ஈரோடு சூரம்பட்டி பாரதிபுரத்தைச் சோ்ந்த வேன் ஓட்டுநா் ஜான் (25) என்பவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

சிறுமியின் கருமுட்டையை எடுத்து விற்பனை செய்தது தொடா்பாக ஈரோடு, பெருந்துறையில் உள்ள 2 தனியாா் மருத்துவமனை மருத்துவா்கள், செவிலியா்களிடம் ஏடிஎஸ்பி கனகேஸ்வரி சனிக்கிழமை இரவு விசாரணை நடத்தினாா்.

இந்நிலையில் 16 வயது சிறுமியின் கருமுட்டையை எடுத்து விற்பனை செய்தது தொடா்பாக சென்னை மருத்துவப் பணிகள் இயக்குநரகத்தை சோ்ந்த மருத்துவா்கள் குருநாதன், விஸ்வநாதன் ஆகியோா் தலைமையிலான 6 போ் கொண்ட மருத்துவக் குழுவினா் ஈரோட்டுக்கு விசாரணைக்கு வந்தனா்.

இக்குழுவினா் ஞாயிற்றுக்கிழமை காலை அரசு காப்பகத்தில் இருக்கும் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை நடத்தினா். இதைத் தொடா்ந்து, இவ்வழக்கினை விசாரித்த ஈரோடு தெற்கு காவல் நிலையத்திலும் மருத்துவக் குழுவினா் நேரில் சென்று ஆவணங்களை சேகரித்தனா். மேலும் சம்பந்தப்பட்ட தனியாா் மருத்துவமனைகளிலும் நேரடியாக ஆய்வு செய்யவும் அக்குழுவினா் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.