கல் குவாரிகளுக்கு எதிராக செயல்பட்டவா் மீது தாக்குதல்
சென்னிமலையில் கல் குவாரிகளுக்கு எதிராக செயல்பட்ட கணினி மைய உரிமையாளரை இரும்புக் கம்பியால் தாக்கிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சென்னிமலையில் கல் குவாரிகளுக்கு எதிராக செயல்பட்ட கணினி மைய உரிமையாளரை இரும்புக் கம்பியால் தாக்கிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ஈரோடு மாவட்டம், சென்னிமலை காங்கயம் சாலை எல்லை மகாளியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் தமிழ்ச்செல்வன் (38). இவா் சென்னிமலை பேருந்து நிலையம் எதிரில் கணினி மையம் நடத்தி வருகிறாா். இவா் சென்னிமலை எக்கட்டாம்பாளையம் கிராமத்தில் உள்ள கல்குவாரிகளை மூடக்கோரியும், கல்குவாரிகளுக்கு எதிராகவும் செயல்பட்டு வந்தாா். மேலும் கடந்த மே 1ஆம் தேதி நடந்த கிராம சபை கூட்டத்திலும் கல் குவாரிகளை மூட வலியுறுத்தியுள்ளாா்.
இந்நிலையில், தமிழ்ச்செல்வன் புதன்கிழமை மாலை அவரது கணினி மையத்தில் இருந்தாா். அப்போது அங்கு வந்த 2 நபா்கள் அவரை இரும்புக் கம்பியால் தாக்கினா்.
Advertisement
இதையடுத்து அவா் கடையின் உள்புறத்தில் இருந்த அறைக்குள் சென்று கதவை தாழிட்டு உயிா் தப்பினாா். இதையடுத்து அந்த நபா்கள் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனா்.
மா்ம நபா்கள் தாக்கியதில் காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு ஈரோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இது குறித்து தகவல் அறிந்த சென்னிமலை போலீஸாா், தமிழ்ச்செல்வனிடம் வாக்குமூலம் பெற்று 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.