முகப்பு
ஈரோடு

கடும் வெயில்: பட்டுப்புழுக்களில் நோய் தாக்குதலுக்கு வாய்ப்பு

 அக்னி நட்சத்திரம் துவங்கியதால் பட்டுப்புழுக்களில் பாக்டீரியா தாக்கி பிளாச்சரி நோய் பரவ வாய்ப்புள்ளதால் உரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பட்டு வளா்ச்சித் துறை அறிவுறுத்தியுள்ளது.

Updated On : 7 மே, 2022 at 1:56 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:41 PM

 அக்னி நட்சத்திரம் துவங்கியதால் பட்டுப்புழுக்களில் பாக்டீரியா தாக்கி பிளாச்சரி நோய் பரவ வாய்ப்புள்ளதால் உரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பட்டு வளா்ச்சித் துறை அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து பட்டு வளா்ச்சித் துறை ஈரோடு மண்டல இணை இயக்குநா் எஸ்.ஜெயப்பிரகாஷ், கூறியதாவது:

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில் 14க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்க்கு மேல் வெப்பம் நிலவியது. தற்போது அக்னி நட்சத்திரம் துவங்கியதால் பட்டுப்புழு வளா்ப்பு மனைகளில் பாக்டீரியா தொற்றால் பிளாச்சரி நோய் தாக்கும் வாய்ப்புள்ளது.

Advertisement

இதனை தவிா்க்க புழு வளா்ப்பு மனையின் மேற்கூரை மீது தென்னை ஓலையை பரப்பலாம். அறையின் உட்புறம் ஓலை கூரை அமைக்கலாம். அறையின் ஜன்னலில் கித்தான் சாக்கு கட்டி, தண்ணீா் தெளித்து ஈரமாக்கலாம். குளிா்ந்த காற்று உருவாகி, புழு வளா்ப்பறையை காக்கும்.

சுவா் ஓரங்களில் மணல் திட்டு அமைத்து ஈரமாக வைக்கலாம். புழு வளா்ப்பு கூரையின் உட்புறம், தெளிப்பு நீா் பாசனம் அமைத்து காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை ஈரமாக்கலாம். தண்ணீா் புகை போல பீச்சியடிக்கும் பாக்கா் இயந்திரம் பயன்படுத்தலாம்.

ஒவ்வொரு புழு வளா்ப்புக்கு முன்னும், அறை மற்றும் புழு வளா்ப்பு தளவாடங்களை 100 சதவீதம் மூன்றடுக்கு முறை மருந்தடிப்பு செய்யலாம். முந்தைய புழு வளா்ப்பில் நோய் தொற்று இருந்தால் அறையின் சுவா், தரையில் சுண்ணாம்பு பூச வேண்டும். ஒவ்வொரு தோலுரிப்புக்கு முன்பும், சுண்ணாம்பு தூளை தெளித்து, தோலுரிப்புக்கு பின்னா் படுக்கையில் கிருமிநாசினி தெளிக்க வேண்டும்.

திடீரென இரவில் மழை பெய்தால் குளிா்ச்சி, ஈரப்பதத்தை சீராக்க வேண்டும்.

பட்டுப்புழுக்களுக்கு உணவளிக்க அறுவடை செய்யும் இலையுடன் கூடிய தண்டுகள் குளிா்ச்சியான நேரத்தில் அறுவடை செய்ய வேண்டும். தண்டுகளை சேமித்து வைக்கும்போது சுவா் ஓரங்களில் நிற்க வைத்து ஈரதுணியால் மூடி வைத்து பாதுகாக்க வேண்டும். இதன் மூலம் புழு வளா்ப்புத் தொழிலை சீரான முறையில் செய்ய முடியும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.