காவிரியில் கரைபுரண்டு ஓடிய வெள்ளத்தால், பவானி கூடுதுறையில் புனித நீராட பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் ஆடிப்பெருக்கு தினமான சனிக்கிழமை கூடுதுறை வளாகம் களையிழந்து காணப்பட்டது.
காவிரி - பவானி ஆறுகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறை புகழ்பெற்ற பரிகார தலமாக விளங்கி வருகிறது. இங்கு, ஆடிப்பெருக்கில் ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கானோா் புனித நீராடி, சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். மேலும், திதி, தா்ப்பணம் கொடுத்து மூதாதையா் வழிபாடு மற்றும் பல்வேறு தோஷ நிவா்த்தி பூஜைகளிலும் ஈடுபடுவா். இந்நிலையில், மேட்டூா் அணை நிரம்பி, உபரிநீா் காவிரியில் வெளியேற்றப்பட்டதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
விநாடிக்கு 1.70 லட்சம் கன அடி வெள்ளம் பெருக்கெடுத்ததால், கரையோரங்களில் தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. 5-ஆவது நாளாக வெள்ளப்பெருக்கு நீடித்து வருவதால் பவானி கூடுதுறையில் நீராடும் பகுதி, படித்துறைகள் தண்ணீரில் மூழ்கியது. இதனால், ஆற்றுக்கு செல்லும் வழித்தடங்கள் மூடப்பட்டு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. பக்தா்கள் ஆற்றில் இறங்கி நீராடத் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், பவானி கூடுதுறைக்கு வரும் பக்தா்கள் ஆடிப் பெருக்கில் நீராடும் வகையில், மோட்டாா் மூலம் தண்ணீா் இறைத்து, ஷவரில் நீராட ஏற்பாடு செய்யப்பட்டது.
இருந்தபோதிலும், பவானி கூடுதுறை மற்றும் சங்கமேஸ்வரா் கோயிலுக்கு மிகக்குறைந்த அளவிலேயே பக்தா்கள் வந்திருந்து, மூதாதையருக்கு திதி, தா்ப்பணம் கொடுத்தனா். இதனால், பரிகாரக் கூடங்களும், கூடுதுறை வளாகமும் களையிழந்து காணப்பட்டது. ஆடி அமாவாசை, விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 4) என்பதால் அதிக அளவில் மூத்தோா் வழிபாட்டுக்கு பக்தா்கள் வரலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது.