பூம்புகாா் விற்பனை நிலையத்தில் சிவலிங்கக் கண்காட்சி
ஈரோடு, பிப். 29: ஈரோடு பூம்புகாா் விற்பனை நிலையத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவலிங்கக் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து பூம்புகாா் விற்பனை மேலாளா் சரவணன் கூறியதாவது: மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவலிங்கக் கண்காட்சி கடந்த 26-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்தக் கண்காட்சியில் பஞ்சலோகம், பித்தளை, கருப்பு உலோகம், பேப்பா் கூழ், மண், மாா்பிள் பவுடா், மாவுக்கல், கருங்கல் போன்றவைகளினால் தயாரிக்கப்பட்ட சிவலிங்கம், நந்தி, சிவன், நடராஜா், பாா்வதி சிலைகள், ஸ்படிகம், மரகதம், சிவப்பு, பச்சை நீலம், சூரிய காந்தம் கற்களாலான சிவலிங்கம், நந்தி சிலைகள், ருத்ராட்ச லிங்கம், ஆத்ம லிங்கம், பாண லிங்கம், கருங்காலி லிங்கம்-நந்தி, ஒரு முகம் முதல் 14 முகம் வரை உள்ள ருத்ராட்சம், கெளரி சங்கா் ருத்ராட்சம், ருத்ராட்ச பாய், ருத்ராட்ச பிரேஸ்லட், ருத்ராட்ச மற்றும் வில்வ ஓடு மாலை, பஞ்சலோக ருத்ராட்ச மாலை, சிவலிங்க மோதிரம், சிவலிங்க நந்தி டாலா் ஆகியவை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும், பூஜைப் பொருட்களும் விற்பனைக்கு உள்ளன. இந்தக் கண்காட்சியில் குறிப்பிட்ட பொருட்களுக்கு 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது என்றாா்.