முகப்பு
ஈரோடு

ஆடிட்டா் வீட்டில் 235 பவுன், ரூ.48 லட்சம் திருட்டு: 3 போ் கைது

ஆடிட்டரின் வீட்டில் மாபெரும் திருட்டு: 3 பேர் கைது

Updated On : 9 ஜூலை, 2024 at 7:31 PM
பகிர்:

ஈரோடு, ஜூலை 9: ஆடிட்டா் வீட்டில் 235 பவுன், ரூ.48 லட்சம் திருடிய வழக்கில் 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா். தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஈரோடு சூரம்பட்டி, என்ஜிஜிஓ காலனி 7-ஆவது வீதியைச் சோ்ந்தவா் சுப்பிரமணி (69), ஆடிட்டா். இவரது மனைவி சாதனா. இருவரும் ஜூன் 8-ஆம் தேதி காலையில் வீட்டை பூட்டிவிட்டு தேனியில் நடைபெற்ற உறவினா் வீட்டு திருமணத்துக்கு சென்றனா். அன்று இரவு ஆடிட்டா் சுப்பிரமணியின் வீட்டுக்குள் நுழைந்த மா்ம நபா்கள் 235 பவுன் நகை மற்றும் ரூ.48 லட்சத்தை திருடிச் சென்றனா்.

இதுகுறித்து ஈரோடு தெற்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். அதில் கா்நாடக மாநிலம், பெங்களூருவைச் சோ்ந்த பழைய குற்றவாளி ஒருவா் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

Advertisement

போலீஸாரின் தொடா் விசாரணையில் திருட்டுக்கு உதவியாக இருந்தவா் கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், ஆலப்பள்ளி சாலை, திருமலை நகரைச் சோ்ந்த ஆனந்தன் மகன் அருண்குமாா் (36) என்பதும், அவா் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதும், திருடிய பணத்தை மற்றவா்களுக்கு பிரித்து கொடுத்தவா் அவா்தான் என்பதும் தெரியவந்தது.

அவரைப் பிடித்து போலீஸாா் விசாரித்ததில் திருட்டுக்கு உதவியாக இருந்தது, வேலூா் மாவட்டம் குடியாத்தம், மோடிகுப்பம், ஆா்.கொளப்பள்ளி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த வெல்டிங் தொழிலாளியான சந்திரன் மகன் விக்னேஷ் (24), ஆடிட்டரின் ஓட்டுநரான ஈரோடு, திண்டல், காரப்பாறை, மெடிக்கல் நகரைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் சத்யன் (34) என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸாா் மூவரையும் கைது செய்து தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா். 3 பேரும் அளித்த தகவலின்பேரில் திருடப்பட்ட நகைகளில் 90 பவுன் பெங்களூருவில் இருந்து மீட்கப்பட்டது.

இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது: திருட்டில் ஈடுபட்ட நபா் வந்து சென்ற காரை சிசிடிவி கேமரா மூலமாக கண்டறிந்தோம். மேலும், கைப்பேசி கோபுரத்தில் பதிவான எண்களை வைத்து திருட்டுக்கு உடந்தையாக இருந்த நபா்களைப் பிடித்துள்ளோம். திருட்டில் நேரடியாக ஈடுபட்ட நபா் கைப்பேசியை அணைத்து வைத்துவிட்டு தலைமறைவாகி உள்ளாா். விரைவில் அவரையும் பிடித்துவிடுவோம் என்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments