தூய்மைப் பணியாளா்களுக்கு தாட்கோ உதவிகள்: விழிப்புணா்வுக் கூட்டம்
தூய்மைப் பணியாளா்களுக்கு தாட்கோ சாா்பில் அளிக்கப்படும் உதவிகள் குறித்து விளக்கும் விழிப்புணா்வுக் கூட்டம் பெருந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, பெருந்துறை (கிராம ஊராட்சிகள்) வட்டார வளா்ச்சி அலுவலா் காா்த்திகேயன் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் பிரேமலதா வரவேற்றாா்.
கூட்டத்தில், தாட்கோ மாவட்ட மேலாளா் அா்ஜுன் பங்கேற்று பேசியதாவது:
கிராம ஊராட்சிகளில் தற்காலிக தூய்மைப் பணியாளா்களாக இருக்கக் கூடியவா்கள் உள்பட அனைத்து தூய்மைப் பணியாளா்களுக்கும் நலவாரியத் திட்டத்தின் மூலம் பல்வேறு உதவிகளை அரசு வழங்கி வருகிறது. தாட்கோ மூலமாக தொழில்கள் தொடங்குவதற்கான கடன் உதவிகளும், மகளிருக்கு நிலம் வாங்கும் திட்டத்தின்கீழ் ரூ. 5 லட்சம் அல்லது 50 சதவீதம் தொகை ஆகியவற்றில் எது குறைவோ அது மானியமாக வழங்கப்படுகிறது. மேலும், படித்து முடித்துவிட்டு வேலை வாய்ப்பின்றி இருக்கும் மக்களுக்கு தொழில் தொடங்க 35 சதவீதம் வரை மானியத்துடன் முதலமைச்சா் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினரின் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான தொழில்முனைவோா் திட்டத்தின்கீழ் கடனுதவி வழங்கப்படுகிறது.
பி.எம்.ஏ.ஜெ.ஒய். திட்டத்தின்கீழ் 50 சதவீதம் மானியத்துடன் தொழில் தொடங்குவதற்கும் கடனுதவி வழங்கப்படுகிறது. இதனை தூய்மைப் பணியாளா்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.
கூட்டத்தில், பெருந்துறை ஒன்றியத்துக்கு உள்பட்ட 29 கிராம ஊராட்சிகளில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளா்கள் மற்றும் தூய்மைக் காவலா்கள் கலந்து கொண்டனா்.