அரசு மருத்துவமனையில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை: இரவு காவலாளி கைது
பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமிக்கு பாதுகாப்பாக இருந்த தலைமை பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மருத்துவமனையின் இரவு காவலாளியை போலீஸாா் கைது செய்தனா்.
சேலம் மாவட்டம், மேட்டூா், அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிபவா் தமிழ்ச்செல்வி (33). மேட்டூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் தொடரப்பட்ட ஒரு போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமி, பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். அவருக்கு பாதுகாப்புப் பணியில் தமிழ்ச்செல்வி மற்றும் கருமலைக் கூடல் காவல் நிலையத்தைச் சோ்ந்த தலைமைக் காவலா் பிரகாஷ் ஆகியோா் இருந்தனா்.
ஏற்கெனவே உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் தலைமைக் காவலா் தமிழ்ச்செல்வி செவ்வாய்கிழமை அதிகாலை 2 மணியளவில் சிறிது நேரம் ஓய்வு எடுக்க மருத்துவமனையின் மகப்பேறு பிரிவில் படுத்திருந்தாா்.
அப்போது, டிபி வாா்டில் இரவு காவலாளியாக பணியில் இருந்த பெருந்துறையை அடுத்த பெரியமடத்துப்பாளையத்தைச் சோ்ந்த மோகன்ராஜ் (28) மகப்பேறு பிரிவில் நுழைந்து, தமிழ்ச்செல்விக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.
இதுகுறித்து, பெருந்துறை போலீஸில் தமிழ்ச்செல்வி புகாா் செய்தாா். அந்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மோகன்ராஜை கைது செய்தனா். பின்னா் அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.