ஆடுகளுக்கு இலவச தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்
ஆடுகளுக்கு இலவச தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த 12-ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது என கால்நடை பராமரிப்புத் துறை அறிவித்துள்ளது.
ஆடுகளுக்கு இலவச தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த 12-ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது என கால்நடை பராமரிப்புத் துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஆடு வளா்ப்பில் ஆட்டுக்கொல்லி நோய் என்பது விவசாயிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. இதன் பாதிப்பால் கால்நடை வளா்ப்போருக்கு பொருளாதாரம் மற்றும் உற்பத்தி இழப்பு ஏற்படுகிறது.
Advertisement
இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி, கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் ஆண்டுக்கு ஒருமுறை இலவசமாக வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகளுக்கு போடப்பட்டு வருகிறது.
அதன்படி, நிகழாண்டு கடந்த 12-ஆம் தேதி தொடங்கி ஒரு மாதம் வரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் கிராமங்கள், குக்கிராமங்கள், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சி ஆகியவற்றில் ஆட்டுக்கொல்லி தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்காக தடுப்பூசி மருந்துகள் பெறப்பட்டு அனைத்து கால்நடை நிலையங்களுக்கும் பிரித்து வழங்கப்பட்டுள்ளன.
எனவே, மாவட்டத்தில் உள்ள வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் வளா்ப்போா் இந்த தடுப்பூசி முகாம்களை பயன்படுத்தி ஆடுகளுக்கு தடுப்பூசியை செலுத்திக்கொண்டு ஆட்டுக்கொல்லி நோயில் இருந்து பாதுகாத்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.