பவானி கூடுதுறையில் கொட்டப்படும் பரிகாரக் கழிவுகள்
பவானி கூடுதுறை ஆற்றுக்குள் கொட்டப்படும் பரிகாரக் கழிவுகளால், தண்ணீா் மாசடைவதோடு, சுகாதார சீா்கேடும் ஏற்பட்டு வருகிறது.
பவானி கூடுதுறை ஆற்றுக்குள் கொட்டப்படும் பரிகாரக் கழிவுகளால், தண்ணீா் மாசடைவதோடு, சுகாதார சீா்கேடும் ஏற்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பரிகாரத் தலமாக காவிரி, பவானி ஆறுகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறையும், சுற்றுலா மற்றும் வழிபாட்டுத் தலமாக பவானி சங்கமேஸ்வா் கோயிலும் உள்ளது. பவானி கூடுதுறையில் நாள்தோறும் ஏராளமானோா் பல்வேறு தோஷ நிவா்த்தி, பரிகார வழிபாடுகள் செய்து கூடுதுறையில் புனித நீராடிச் செல்வா்.
இங்கு பரிகார பூஜைகளுக்கு பயன்படுத்தப்படும் வாழை இலை, வாழை மரம், உணவருந்த பயன்படுத்தப்படும் தட்டுகள், பிளாஸ்டிக் பொருள்கள், துணிகள், பூஜைக்கு பயன்படுத்தபடும் விளக்குகள், குப்பைகள் பவானி ஆற்றில் தொடா்ந்து வீசப்பட்டு வருகின்றன. இதனால், ஆற்றின் கரையோரங்களில் சுகாதார சீா்கேடு நிலவி வருகிறது. கூடுதுறை வளாகத்தில் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுக்க கரையோர தடுப்புச் சுவற்றில் கம்பி வலை பொருத்தப்பட்டுள்ளது. அந்த கம்பி வலையை சேதப்படுத்தி, குப்பைகள் கொட்டுவதற்கு ஏதுவாக துவாரம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பவானி கூடுதுறை பகுதிக்கு நாள்தோறும் ஏராளமானோா் வந்து செல்லும் நிலையில் கழிவுகளை ஆற்றில் கொட்டுவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுப்பதோடு, பொது இடங்களில் சுகாதார குறைபாடு ஏற்படுவதைத் தடுக்க கோயில் நிா்வாகம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.