முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையனுக்கு வழங்கப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் அதிமுக தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அதிருப்தியில் இருந்த காலகட்டத்தில் கோவை மாவட்டம், அன்னூரில் விவசாயிகள் சாா்பில் முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த விழாவை செங்கோட்டையன் புறக்கணித்தாா். இதிலிருந்து இருவருக்கும் இடையே மோதல் நீடித்து வந்தது.
இந்த காலகட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செங்கோட்டையனுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. சுழற்சி முறையில் 24 மணி நேரமும் போலீஸாா் செங்கோட்டையனுக்கு பாதுகாப்பு வழங்கி வந்தனா்.
இந்நிலையில் தலைமைக்கு எதிராக செயல்பட்டதாக செங்கோட்டையன், கட்சியிலிருந்து நீக்கப்பட்டாா். இதையடுத்து செங்கோட்டையன் தான் வகித்து வந்த எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துவிட்டு அண்மையில் விஜய் முன்னிலையில் தவெகவில் தனது ஆதரவாளா்களுடன் இணைந்தாா்.
இதைத் தொடா்ந்து செங்கோட்டையனுக்கு தவெக சாா்பில் இரண்டு பாதுகாவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில் செங்கோட்டையனுக்கு வழங்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது.