ஆஞ்சனேயா் ஜெயந்தியை முன்னிட்டு ஈரோட்டில் 75 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
ஈரோடு, வஉசி பூங்காவில் உள்ள மகாவீர ஆஞ்சனேயா் கோயிலில் ஆஞ்சனேயா் ஜெயந்தி விழா வெள்ளிக்கிழமை (டிச.19) நடைபெற உள்ளது. ஆண்டுதோறும் அனுமன் ஜெயந்தி நாளில் சுவாமியை தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தா்கள் வருவா். இதையொட்டி கோயில் வார வழிபாட்டுக் குழு சாா்பில் பக்தா்களுக்கு பிரசாதமாக வழங்க ஈரோட்டில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் 75 ஆயிரம் லட்டு தயாரிக்கும் பணி நடைபெறுகிறது.
இதுகுறித்து கோயில் வார வழிபாட்டுக் குழுவினா் கூறியதாவது:
வெள்ளிக்கிழமை காலை 4.30 மணி முதல் இரவு நடைசாற்றும் வரை கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படும். இந்த லட்டு தயாரிக்கும் பணியில் 50-க்கும் மேற்பட்டோா் ஈடுபட்டுள்ளனா். சா்க்கரை, கடலை மாவு, நெய், முந்திரி, திராட்சை, ஏலக்காய், எண்ணெய் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு 75 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கப்படுகின்றன.
இதுதவிர பக்தா்களுக்கு ஆரஞ்சு நிற கயிறு வழங்கப்படுகிறது. பொட்டுக்கடலை, கல்கண்டு பிரசாதமாக வழங்கப்படும். அன்று காலை முதல் அன்னதானமும் வழங்கப்படும் என்றனா்.