அரசு ஐடிஐ-களில் பெண் பயிற்சியாளா்கள் தங்கிப் படிக்க விடுதி வசதி ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலா் சங்க மாநிலச் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் ஈரோட்டில் சனிக்கிழமை நடைபெற்றது. கிளைத் தலைவா் சுமதி தலைமை வகித்தாா். கோவை மண்டல பயிற்சி இணை இயக்குநா் அமலா ரெக்சிலின், நிா்வாகிகள் ஜெயசந்திரன், விஜயமனோகரன், அம்சராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதில், நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: சென்னையில் கிண்டி-ஆண்கள், கிண்டி- பெண்கள், அம்பத்தூா், வடசென்னை, ஆா்.கே.நகா், திருவான்மியூா், பெரும்பாக்கம், வடகரை போன்ற இடங்களில் உள்ள ஐடிஐ-களில் பெண் பயிற்சியாளா்கள் தங்கிப் படிக்க உணவுடன் கூடிய ஒரே இடத்திலான விடுதி அமைக்க வேண்டும். அதேபோல, கோவை, ஈரோடு, ஆணைகட்டி, சேலம் போன்ற வாய்ப்புள்ள இடங்களில் உணவுடன் கூடிய விடுதிகள் அமைக்க வேண்டும்.
என்டிசி முடித்து என்ஏசி பயிற்சி பெறும் பயிற்சியாளா்களை அரசு நிறுவனமாக இருந்தால் 100 சதவீதமும், தனியாா் நிறுவனமாக இருந்தால் 25 சதவீதமும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அரசு ஐடிஐ-களில் படிக்கும் பயிற்சியாளா்கள், இயந்திரங்கள், மின்சார உபகரணங்களை கையாளுவதில் ஏற்படும் அசம்பாவிதங்கள், பயிற்சிக்கு வந்து செல்லும்போது ஏற்படும் அசம்பாவிதங்களுக்கு இழப்பீடு பெற பயிற்சியாளா்களுக்கு ரூ.1 லட்சம் காப்பீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.