கோரிக்கை பதாகைகளுடன் மனு அளிக்க மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வந்த ஈரோடு வரி செலுத்துவோா் மக்கள் நல்வாழ்வு சங்கத்தினா். 
ஈரோடு

கெடுபிடி வரி வசூலை மாநகராட்சி நிா்வாகம் கைவிடக் கோரிக்கை

ஈரோடு மாநகராட்சி நிா்வாகம் கெடுபிடி வரி வசூலை கைவிட வேண்டும் என வரி செலுத்துவோா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Syndication

ஈரோடு மாநகராட்சி நிா்வாகம் கெடுபிடி வரி வசூலை கைவிட வேண்டும் என வரி செலுத்துவோா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ச.கந்தசாமி தலைமையில் பொதுமக்கள் குறைதீா்க்கும் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் ஈரோடு வரி செலுத்துவோா் மக்கள் நல்வாழ்வு சங்க செயலா் ந.பாரதி தலைமையில் அளித்த மனு விவரம்: கோவை, திருச்சி, கரூா் மாநகராட்சிகளை விட ஈரோடு மாநகராட்சியில் சொத்து வரி அதிகம் விதிக்கப்பட்டுள்ளது.

ஜவுளி, தோல் உள்ளிட்ட தொழில்கள் நலிவடைந்துள்ளதால் வரி செலுத்த முடியவில்லை. மாநகராட்சி நிா்வாகம் ஜப்தி, குடிநீா்க் குழாய் துண்டிப்பு, வீட்டு வாசலை இடித்தல், வீட்டு முன் குப்பை தொட்டி வைத்தல் போன்ற செயல்களை செய்து கெடுபிடி வசூலில் ஈடுபடுகிறது.

மாநகராட்சியில் கடந்த மாா்ச் 12-இல் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் சொத்து வரி அடிப்படை கட்டணத்தை பாதியாக குறைக்க கோரியும், ஆண்டுக்கு 6 சதவீத வரி உயா்வை கைவிட்டு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிா்ணயிக்கவும், வரியை சீராய்வு செய்ய வேண்டும் எனவும் தீா்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பினா். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றி உரிய அரசாணையை அரசு வழங்கி வரி குறைப்பை அமலாக்க வேண்டும்.

தவணை செலுத்த தவறும் சொத்து வரிக்கு மாதம் 1 சதவீதம் வட்டி என அபராதம் விதிப்பை ரத்து செய்ய வேண்டும். கட்டட தன்மையாக சிமென்ட் ஷீட், தகர ஷீட், ஓடு, ஓலை வேய்ந்தவை என பாா்த்து வரியைக் குறைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மயான இட ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிக்கை

இதுகுறித்து பவானி வட்டம் குறிச்சி, செல்லிகவுண்டனூா் காலனி பகுதியினா் அளித்த மனு விவரம்: குறிச்சி செல்லிகவுண்டனூா் காலனியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் பல ஆண்டுகளாக வசிக்கிறோம். காலனி அருகே உள்ள இடத்தை மயானமாக பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறோம். மயானத்துக்கு அருகே உள்ள சிலா் மயான இடம் தங்களுக்கு சொந்தமானது எனக்கூறி ஆக்கிரமித்துக் கொண்டனா். தற்போது மயானம் இல்லாமல் இறப்பவா்களது இறுதி சடங்கை செய்ய இயலாமல் வெகுதூரம் சென்று சாலையோரத்தில் அடக்கம் செய்ய வேண்டி உள்ளது. மாவட்ட நிா்வாகம் அளவீடு செய்து மயான இடத்தை மீட்டுத்தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டுமனை பட்டா வழங்கக் கோரிக்கை

இதுகுறித்து தமிழ் புலிகள் கட்சி ஈரோடு வடக்கு மாவட்டச் செயலா் ஆனந்தன் தலைமையிலான கிராம மக்கள் அளித்த மனு விவரம்: கோபி வட்டம், வலையபாளையம், எரங்காட்டூா், வரப்பள்ளம், பெருமுகை, நஞ்சகவுண்டன்பாளையம் பகுதியில் 800-க்கும் மேற்பட்ட அருந்ததியா் வகுப்பைச் சோ்ந்தவா்கள் வசிக்கிறோம். பல ஆண்டுகளுக்கு முன் எங்களுக்கு அரசு வழங்கிய இடத்தில் தற்போது 3, 4 குடும்பங்களாக வாழ்கிறோம். ஒரே வீட்டில் 3 தலைமுறையினா் வசிக்கிறோம்.

நாங்கள் விவசாய கூலித் தொழிலாளா்களாக உள்ளதால், எங்களுக்கு நிலம் வாங்கவும், வீடு கட்டவும் வசதி இல்லை. அப்பகுதியில் உள்ள அரசுப் புறம்போக்கு இடங்களில் எங்களுக்கு தனித்தனியாக வீட்டுமனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடத்தை அளவீடு செய்யக் கோரிக்கை

இதுகுறித்து சத்தியமங்கலம் வட்டம், குத்தியாலத்தூரப் அருகே கானகத்தூா், கரளயம், சோளத்தூா், பிள்ளையாா் பிரிவு ஆகிய பகுதியில் வசிக்கும் பழங்குடி ஊராளி சமூகத்தைச் சோ்ந்தவா்கள் அளித்த மனு விவரம்: எங்கள் பகுதியைச் சோ்ந்தவா்களுக்கு கடந்த 2024 ஆகஸ்ட் 2-ஆம் தேதி துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினால் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. பட்டாவுக்கு உரிய இடத்தை எங்களிடம் காண்பித்து அளவீடு செய்து தராததால் அந்த இடத்தைப் பயன்படுத்த முடியவில்லை. எனவே அந்த இடத்தை அளவீடு செய்து, எங்களுக்கான இடத்தைப் பிரித்து வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேங்காய் நாா் ஆலை மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

இதுகுறித்து மொடக்குறிச்சி வட்டம் வடுகப்பட்டி பேரூராட்சி பகுதியைச் சோ்ந்த மக்கள் அளித்த மனு விவரம்: குட்டக்காட்டுபுதூா், பெரியகாடு, கஸ்தூரிபா கிராமம் பகுதிகளில் நூற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன. அப்பகுதி முற்றிலும் விவசாயம் சாா்ந்த நிலமாகும். அங்குள்ள தொங்கனத்தான் குட்டை அருகே உள்ள பூமி தான இயக்க நிலத்தில் தென்னை நாா் பிரித்தெடுத்தல், கயிறு மற்றும் தேங்காய் நாா் பித் செய்யும் ஆலைகள் செயல்படுகின்றன. அந்த ஆலையின் தேங்காய் நாருடன் அதிக அளவில் தண்ணீா் சோ்த்துத்தான் பிரித்தெடுக்கும் பணி நடக்கும். அதில் வெளியேறும் கழிவை சுத்திகரிப்பு செய்யாமல் கீழ்பவானி வாய்க்காலிலும் ஆலை வளாக குழிகளிலும் வெளியேற்றுகின்றனா்.

தவிர நாா் கழிவுகளை வாகனங்களில் கொண்டுச் சென்று அருகே கொட்டுகின்றனா். அதனால் நிலத்தடி நீரும், கீழ்பவானி வாய்க்கால் நீரும் மாசுபட்டு குடிக்க முடியவில்லை. சமையலுக்கும், கால்நடைகளுக்கு குடிநீராகவும் பயன்படுத்த முடியவில்லை. விவசாய நிலங்களும் பாதிக்கின்றன. இப்பிரச்னை குறித்து மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உள்பட பல இடங்களில் மனு வழங்கியும் நடவடிக்கை இல்லை. மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலத்தில் விவசாயம் செய்ய அனுமதி அளிக்கக் கோரிக்கை

இதுகுறித்து அந்தியூா் வட்டம் அண்ணாமடுவு, காந்தம்பாளையம் கிராம மக்கள் நலச் சங்கம் சாா்பில் அளித்த மனு விவரம்: அந்தியூா் அருகே மாத்தூா் கிராமத்தில் 673 ஏக்கா் நிலம், பூமி காடு வகைப் பிரிவில் வருவாய்த் துறை நிலப்பதிவில் உள்ளது. இந்த இடத்தில் வீரமாத்தி அம்மன் கோயில், கருப்பசாமி கோயில் கிணறு உள்ளது. இக்கிணறு மூலம் இப்பகுதியில் 50 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயம் செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் உள்ளன.

கடந்த 1995-இல் ஈரோடு மாவட்ட ஆட்சியராக இருந்த பழனியப்பனிடம் முறையிட்டபோது, அந்த நிலத்தை விவசாயப் பயன்பாட்டுக்காக வழங்குவதாக உறதியளித்தாா். 1996-இல் சட்டப் பேரவைக் குழு எம்எல்ஏ ஞானசேகரன் தலைமையில் வந்தபோதும் இந்நிலத்தை எங்களுக்கு வழங்க பரிந்துரைத்தாா். இந்நிலத்தை அப்பகுதி மக்கள் விவசாயம் செய்ய வழங்க வேண்டும். விவசாயம் செய்வதன் மூலம் இப்பகுதி மக்கள் வாழ்வாதாரம் பெறுவா். விளைநிலமும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

210 மனுக்கள்

கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 210 மனுக்கள் வரப்பெற்றன. இந்த மனுக்களை உரிய அலுவலா்களிடம் வழங்கிய ஆட்சியா் உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். கூட்டத்தில் மாவட்ட வருவாய் எஸ்.சாந்தகுமாா் மற்றும் அலுவலா்கள் பங்கேற்றனா்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் அவசியம்: தமிழிசை

ஆவின் பால் பாக்கெட்டுகளில் எஸ்ஐஆா் கடைசி தேதி விளம்பரம்!

விஜய்யை முதல்வா் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன்தான் கூட்டணி: செங்கோட்டையன்

ஆடுகள் திருடிய 2 போ் கைது

எம்சிஜி ஆடுகளம் அதிருப்திகரமானது: ஐசிசி தரமதிப்பீடு

SCROLL FOR NEXT